காவிரி வரைவுத் திட்ட அறிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தமிழகம்
CM Edapadi2 2017 9 3

சென்னை : சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கலான  காவிரி வரைவுத் திட்ட அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது இன்றைய விசாரணையில் எடுத்துரைக்க வேண்டிய வாதங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கடும் கண்டனம்

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளித்தது. அப்போது 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.  6 வாரத்திற்கு பிறகு ஸ்கீம் என்றால் என்ன என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் கேட்டது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.


தாக்கல் செய்தது

பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் உள்பட அனைத்தையும் உள்ளடக்கியதே என்று விளக்கம் கூறிய சுப்ரீம் கோர்ட் மேலாண்மை வாரியம் அமைக்க 4 முறை கெடு விதித்தது. ஆனால் கர்நாடக சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு இந்த விசயத்தில தாமதம் செய்துகொண்டே இருந்தது. இறுதியில் நேற்று முன்தினம் காவிரி வரைவு திட்டத்தை ஒரு வழியாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போதும் கூட புதிதாக அமைக்கப்படும் அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேள்வி எழுப்பியது. அதாவது வாரியமா ? குழுவா ? அமைப்பா? என்று சுப்ரீம் கோர்ட்டிடமே கருத்து கேட்டது மத்திய அரசு.

ஆலோசனை...

இந்த நிலையில் வரைவு திட்ட அறிக்கை தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கை குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரைவு திட்ட அறிக்கை குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று வரைவு திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய பதில்கள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து