முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து மேலும் நீர் திறப்பு: 22,000 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து கூடுதலாக திறக்கப்பட்ட நீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது. இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

நீர் திறப்பு குறைப்பு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைத்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால் அணையில் இருந்து பாகாப்பு கருதி 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே கேரளாவில் மழை குறைந்து கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

மீண்டும் மழை ...
கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 20-ம் தேதி அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 21-ம் தேதி தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் காலை முதல் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 13 ஆயிரத்து 758 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 80.8 அடியாக இருந்தது.

ஒகேனக்கல் வந்தது...
124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2961 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து வெள்ளிக்கிழமை இரவு ஒகேனக்கலுக்கு வந்தடைந்தது.

சுற்றுலா பயணிகள்...
இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் காலை முதலே ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீர் வரத்து அதிகரித்ததால் காவிரி கரையில் நின்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்தனர்.

மேட்டூர் வந்தது
காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து அளவிட்டு வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று பிற்பகல் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேலும் உயர்ந்தது...
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம்  2 ஆயிரத்து 618 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 1299 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 50.59 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 50.68 அடியாக உயர்ந்தது.கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று பிற்பகல் முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் இனி வரும் நாட்களில் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து