முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா ? முதல்வர் எடப்பாடி கேள்வி

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது  விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா ? என்று மேட்டூரில் பாசனத்திற்காக அணையை திறந்த பின் நிருபர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கேள்வி தி.மு.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர். திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை திறந்த பின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: எட்டுவழிச் சாலைக்காக மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது பற்றி...

பதில்: யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊடக நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும் ஒரு சில இடத்தில் செய்வதை வைத்து, பெரிதாக பூதாகரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் நில அளவுப் பணி நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். பசுமைவழிச் சாலைக்கு தேவையான நிலத்தை, நில உரிமையாளர்களிடமிருந்து, எல்லைக்கல் போடப்பட்டுள்ளதாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நில உரிமையாளர்கள் முன்வந்து, எங்களுக்கு நிலம் எடுப்பதனால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நில உரிமையாளர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதனால், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை வைத்து  தொலைக்காட்சி படம் எடுப்பது, பத்திரிகையிலே போடுவது, இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. வளர்ச்சிப் பணியை இவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டு வருகின்ற வளர்ச்சிப் பணியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கடைய நோக்கம்.

தி.மு.க. ஆட்சியில் பாதிக்கவில்லையா?

பசுமை வழிச்சாலை திட்டத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்? அவசரம் இல்லை, அவசரம் என்ற பிரச்சினையே கிடையாது. அந்த நிதியை குறிப்பிட்ட காலத்தில் வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டாவது திட்டமாக இந்த பசுமை வழிச்சாலை திட்டம் இந்தியாவில் வருகிறது. பல்வேறு மாநிலங்கள் எங்களுக்கு கொடுங்கள், எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் கேட்டவுடனேயே கொடுத்தார்கள். ஆகவே, அந்த வாய்ப்பை நல்லமுறையிலே பயன்படுத்த வேண்டியது அரசினுடைய கடமை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற எதிர்க்கட்சியெல்லாம் சொல்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

3005 ஹெக்டேர் நிலங்கள்...

அப்பொழுது, தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு 17 சாலைகள் எடுக்கப்பட்டு,  கிட்டத்தட்ட 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? அப்பொழுது தமிழகத்தினுடைய வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சம், இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம். இந்தத் திட்டம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஐந்தாண்டு காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே 14 லட்சம் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, 2.57 லட்சம் இருக்கின்றது. ஐந்தாண்டு காலம் நிறைவுபெறுகின்றபொழுது, 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். ஆக மொத்தம், 3.27 லட்சம் வாகனங்கள் உயர்ந்து விடும். எனவே, அதற்குத் தேவையான சாலை வசதி தேவை. இவர்களுடைய காலத்தில் சாலை போட்டால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா ? நிலம் எடுத்தால் பாதிக்கப்படமாட்டார்களா ?

60 கிலோ மீட்டர் ...

ஆனால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, மத்தியிலிருந்து போராடி, வாதாடி, நிதி உதவி பெற்று இந்த சாலையை அமைக்கின்றது. இந்த சாலையை அமைப்பதின் மூலமாக சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு 60 கிலோ மீட்டர் குறைவாகிறது. பயண நேரம் குறைகிறது. இதனால் தொழில்வளம் பெருகும். இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் நம்முடைய பகுதிக்கு கொண்டு வந்து, படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டியது அரசினுடைய கடமை. இப்படிப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.

கேள்வி: கிட்டத்தட்ட 2.50 கோடி வாகனங்கள் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதில் 2 கோடி வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் தானே ?

பதில்: தவறு. 2006-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி சாலை என இரண்டு சாலை இருந்தது. அப்பொழுது கனரக வாகனம் 17 லட்சம்தான் இருந்தது. இன்றைய தினம் 23 லட்சம் கனரக வாகனங்கள் உயர்ந்து 40 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகமாவதால், உயிரிழப்புகள் அதிகமாகிறது. இந்த சாலையை பொறுத்தவரைக்கும், நவீன, தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை. மற்ற சாலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். விபத்துக்கள் குறைக்கப்படுகிறது. விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை.

இழப்பீட்டுத் தொகை...

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சில் நில எடுப்பிற்கான இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுத்தார்கள். இன்று அம்மாவினுடைய ஆட்சிக் காலத்தில், நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 66 சதவிகிதம் உயர்த்தி விட்டோம். அதற்குமேல் கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நிலங்களிலிருக்கின்ற தென்னை மரங்களின் வயதிற்கு ஏற்றவாறு, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு, வீடுகளுக்கு, பாசனக் கிணறுகளுக்கு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு, மாட்டுக் கொட்டகை, தக்க இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். எந்தவகையிலும் நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அரசு கண்ணும், கருத்துமாக இருந்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவின் அடிப்படையில் கணக்கீடு பணி செய்து, இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்.

விவசாயம், பொருளாதார...

அதுமட்டுமல்ல, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலம் கையகப்படுத்தும் போது, உடனடியாக அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு மனை கொடுத்து, வீடுகளும் கட்டித்தரப்படும். இன்றைக்கு சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதற்கு பட்டா கொடுத்துள்ளார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது, அதே நேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். விவசாயம், பொருளாதார வளர்ச்சி இரண்டையும் அம்மாவினுடைய அரசு கவனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து