முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் கருவூல கணக்குத் துறை சார்பில் அலுவலர்களுக்கான திறனூட்டல் கூட்டம் தென்காசி ஜவஹர் தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

தேனி, - தேனி மாவட்டம், க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கலையரங்கத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பில்  அரசு முதன்மைச் செயலர்  தென்காசி சு. ஜவஹர்   தலைமையிலும், மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையிலும் அலுவலர்களுக்கான திறனூட்டல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தென்காசி ஜவஹர்  தெரிவிக்கையில்,  கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது 1962-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நிதித்துறையின் கீழ் ஒரு தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. அரசு உத்தரவின்படி, நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட செயல்பட மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ரூ.288.91 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளதோடு, இத்திட்டத்தினை செயல்படுத்திட தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, மூன்று முன்னோடி நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மாநிலக்கணக்காயர், இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர் ஆகிய பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
 இதன்மூலம் பணிப்பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடமுடியும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்திட நான்கு நாட்கள் பயிற்சி குறிப்பிட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக இரண்டு நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.  இப்பயிற்சி குறித்த விரிவான பரிந்துரைகள், பயிற்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்டு, திட்டத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த பின்னர் நவம்பர்-2018-ல் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான அடையாள அட்டைகளை 659 அரசு இ-சேவை மையங்கள் மூலம் ரூ..30- கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகள் முலம் ஓய்வூதியம் பெற்று வந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு, கருவூல முன்னோடித் திட்டத்தின் கீழ் கருவூலத்தின் வாயிலாக ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 79,000 ஓய்வூதியதாரர்கள்  பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அரசு முதன்மைச் செயலர்  கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர்  தென்காசி சு.ஜவஹர்,   தெரிவித்தார்.
 இப்பயிற்சியில், கே.ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் (மின் ஆளுகை) ஏ.பி.மகாபாரதி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் மரு.எம்.இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து