மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      ஆன்மிகம்
narathiri 07-10-2018

மதுரை,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா வரும் 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்ப பூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும்.

விழாவையொட்டி கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவ மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். 10-ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 11-ம் தேதி மேருவை சென்டால் அடித்தல், 12-ம் தேதி ஊஞ்சல் அலங்காரம், 13-ம் தேதி கல்யானைக்கு கரும்பு கொடுத்தல், 14-ம் தேதி வலைவீசி அருளள் அலங்காரம், 15-ம் தேதி வரகுணபாண்டியருக்கு சிவலோகம் காட்டியது, 16-ம் தேதி சண்முகர் ஜனனம், 17-ம் தேதி மகிஷாசுரமர்த்தினி, 18-ம் தேதி சிவபூஜை அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிக்கிறார்.

நவராத்திரி விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் இந்த விழா நாட்களில் உபய திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடைபெறாது. வருகிற 24-ம் தேதி சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து