அரசு மருத்துவர்கள் போராட்டம் 17-ம் தேதி வரை ஒத்திவைப்பு

மதுரை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் வரும் 17-ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
அரசு மருத்துவர்கள் (இன்று) 8-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை சிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒரு நபர் ஆணையம்
முன்னதாக, மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பாக நேற்று கே.கே.சசிதரன் ஆதி கேசவலு அமர்வில் தமிழக சுகாதாரத்துறை செயலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு மருத்துவர்கள் ஊதிய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராகவே உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் சுகாதார துறை செயலர் கஜா புயல் நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டிரைக் ஒத்திவைப்பு...
இதனையடுத்து, அரசு மருத்துவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வரும் 17-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இதனையடுத்து அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை 17-ம் தேதி வரை கைவிடுவதாக அறிவித்தனர்.