முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

புதன்கிழமை, 12 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேளாண்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை-2018 புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

புத்தகம் வெளியீடு

வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி வீணாவதைக் குறைக்க, வலுவான மற்றும் திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உணவு பதப்படுத்தும் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க, 2018-2019-ம் ஆண்டில் சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் என்று 2018 - 2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட உரையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேளண்மைத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் கொள்கை - 2018 புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டார்.

வசதி வாய்ப்புகள்...

விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணைப் பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் போன்றவை தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018-ன் குறிக்கோள்களாகும். இக்கொள்கை வேளாண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உணவு பதப்படுத்தம் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு உரிய வசதி வாய்ப்புகளை அளிக்கும்.

பல்வேறு சலுகைகள்

தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018-ல் நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம், வட்டி மானியம், மகளிர் / ஆதிதிராவிடர் / பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் வட்டி மானியம், வரி ஊக்கத் தொகை, முத்திரைக் கட்டண விலக்கு, சந்தைக் கட்டண விலக்கு, சந்தைப்படுத்துதலில் உதவி, தரச்சான்று, போக்குவரத்து வசதி, ஏற்றுமதி ஊக்கத் தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைத்தல், ஒற்றைச் சாளர வசதி, தொழிலாளர்களுக்கான சலுகைகள் போன்ற சலுகைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மீன்வள பொருட்களின்...

உணவு பதப்படுத்தும் கொள்கையின் படி தமிழ்நாடு அரசு, உணவு பூங்காக்கள் அமைத்து தொழில் முனைவோர்கள் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு வழிவகை செய்யும். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, உணவு பதப்படுத்தும் கொள்கையினை செயல்படுத்தும் முகமையாக திகழும். மேலும் உணவு பதப்படுத்தும் பிரிவில் அதிக அளவிலான வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதுடன், விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்கச் செய்து, தரமான வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வள பொருட்களின் உற்பத்தியினை அதிகப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து