முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான குளிர்கால கலை பயிற்சி முகாம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ் வழங்கினார்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற குளிர்கால பயிற்சி முகாம் நிறைவுநாளில் கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ்கள் வழங்கினார்.
 ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியிலுள்ள ஆயிர வைசிய மஹாஜன சபையில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் மூலம் நடைபெற்ற மாநில அளவிலான குளிர்கால கலை பயிற்சி நிறைவு விழா கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும், 2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கியதாக தேர்வு செய்யப்பட்ட 10 கலைஞர்களை பாராட்டி விருது மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதோடு, அக்கலைகளை சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் பணியினை செய்து வருகின்றது.  அந்த வகையில், தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைபயிற்சி முகாமானது கடந்த டிசம்பர் 23 துவங்கப்பட்டு நிறைவு விழா நடைபெறகின்றது.
 இப்பயிற்சி முகாமில் பரதம், குரலிசை, நாட்டுப்புறக்கலைகள், ஓவியம், கைவினைக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறுவர், சிறுமியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.  இம்முகாமில் 120 சிறார்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.  மேலும், இவ்விழா அரங்கில் சிறுவர், சிறுமியர்கள் மூலம் தீட்டப்பட்ட ஓவியங்களை காட்சிப்பொருளாக பார்வைக்கு வைத்துள்ளனர்.  இது காண்பவர் உள்ளங்களை கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.  இந்த ஓவியங்களை காணும்போது எனது பள்ளிப்பருவ கால பசுமையான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. கலைகளின் ஆகச்சிறந்த சிறப்பே இவ்வாறு நம் உள்ளத்தின் உணர்வுகளை உயிர்ப்போடு வைத்திருப்பதே ஆகும்.  அந்த வகையில், இவ்விழாவில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான குளிர்கால கலை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதோடு 2016-17 மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கியவர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகள் ஆகியவற்றை கலெக்டர் வீரராகவராவ் வழங்கி பாராட்டினார்.
 இவ்விழாவில், மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் (பொ) மு.க.சுந்தர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, ராமநாதபுரம் ஆயிர வைசிய மஹாஜன சபை துணைத்தலைவர் எஸ்.என்.மனோகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எஸ்.ரத்தினசபாபதி, டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியின் இணைச்செயலாளர் ஆர்.சந்தானம், மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீனலோச்சனி உட்பட அரசு அலுவலர்கள், கலைஞர்கள், சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து