முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுவதை குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது- கமல்நாத் அரசு நடவடிக்கை

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

இந்தூர் : மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக பிடிபட்ட 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டம், மோகாட் பகுதியில் கடந்த ஜனவரி 31 அன்று பசுக்கள் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் குழுவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியை சேர்ந்த சிலர் இப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் கர்கலி கிராமத்தைச் சேர்ந்த ராஜு , ஷக்கீல் மற்றும் அசார் என கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 அன்று போலீசார் அவர்களைக் கைது செய்ய முற்படும்போது மூவரும் தப்பி ஓடினர். இதில் ராஜூ மற்றும் ஷக்கீலை போலீசார் விரட்டிப் பிடித்தனர். 

அசார் என்பவர் தப்பினார். இதனையடுத்து கடந்த திங்களன்று போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அசாரையும் கைது செய்தனர். பின்னர் உடனடியாக இவர்களின் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதன்பின்னர், அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், 3 பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மூன்று பேரின் மீதும் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த 2016ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது பசுவை படுகொலை செய்வோரின் மீது இச்சட்டம் பாய்ந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் பசுவதை குற்றவாளிகள் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து