முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பதற்றமான சூழலை தொடர்ந்து அதிகப்படுத்த இந்தியா விரும்பவில்லை - சீன மாநாட்டில் சுஷ்மா பேச்சு

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : எல்லையில் பதற்றமான சூழலை தொடர்ந்து அதிகப்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று சீனா மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

350 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது நேற்று முன்தினம் இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

சுஷ்மா கோபம்

இந்த தாக்குதலுக்குப்பின் சீனாவில் உள்ள உஹென் மாநிலத்தில் உள்ள வாங் இ நகரில் இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு தொடங்கும் முன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இயை சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ்  பேசினார்.

அப்போது, அவரிடம் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 கொல்லப்பட்டது குறித்து அவர்  இந்தியாவின் வேதனையையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார். இந்த ஆண்டின் நாம் இருவரும் முதல்முறையாக சந்திக்கிறோம். இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்துக்கு ஒத்துழைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்பின் தனது தொடக்க உரையில் மத்தியஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், புல்வாமா தாக்குதல் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசியதாவது:

தாக்குதல் நடத்தியது ஏன்?

இந்தியாவில் மிகுந்த கோபமும், துயரமும் இருக்கும் சூழலில் நான் இப்போது சீனாவுக்கு வந்திருக்கிறேன். ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் எங்கள் ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் மோசமான தாக்குதல். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன், அவர்களின் மண்ணில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது  அமைப்பு செய்துள்ளது. இந்த தாக்குதல் என்பது, ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வருவதாலும், தண்டனையிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருவதாலும் நடந்துள்ளது. நேரடியாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தாக்குதலை நடத்த திட்டம்

புல்வாமா தாக்குதலுக்குப் பின் ஐ.நா.வின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் தாக்குதலை ஒருமித்த உணர்வுடன் கண்டித்துள்ளனர். தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் குறித்து பாகிஸ்தான் கவலை கொள்ளவில்லை, அவர்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அக்கறை காட்டவில்லை. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள் பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதன் காரணமாகவே, எங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்காப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள்  இலக்குகளை தீர்மானித்தோம்.

இந்தியா விரும்பவில்லை

அதே சமயம், பாகிஸ்தான் ராணுவத்தின் எந்தவிதமான இலக்குகளையும் நாங்கள் இலக்காக வைக்கவில்லை. எங்களுடைய நடவடிக்கை என்பது, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கட்டமைப்புகளை சிதைப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.  இந்த பதற்றமான சூழலை தொடர்ந்து அதிகப்படுத்த இந்தியா விரும்பவில்லை. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து