முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது: 9.97 லட்சம் மாணவர்கள் எழுதினர்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து சுமார் 9.97 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 12,546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகளும், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்களும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மொழிப்பாட தேர்வுகள் பிற்பகலிலும், பிற பாடங்களுக்கான தேர்வுகள் காலையிலும் நடக்கின்றன. 

தமிழ் மொழிப் பாடத்திற்கான தேர்வு நேற்று மதியம் 2 முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை,திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையை சேர்ந்த 152 கைதிகளும் பங்கேற்றனர். அவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ள 5 லட்சத்து 22 ஆயிரத்து 409 பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 49 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 வரை நடைபெறுகிறது. தேர்வின் போது கேள்வித்தாள் படித்துப் பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கத்தில் விவரங்கள் எழுதி கையெழுத்திட 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.  

தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க, சிறப்பு கண்காணிப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வறைகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என்று தேர்வுத்துறை எச்சரித்து இருந்தது. 

தேர்வு மையங்களை கண்காணிக்க 5500 பறக்கும் படைகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் தேர்வுக்குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழுவில் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரி, சார் -ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து