வழி தெரியாமல் காட்டில் சிக்கிக் கொண்ட பெண் 17 நாட்களுக்குப் பின் மீட்பு - இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்தாராம்

திங்கட்கிழமை, 27 மே 2019      உலகம்
woman recover 2019 05 27

ஹெனாலு : அமெரிக்காவில் வனப்பகுதியில் மாயமான அமண்டா எல்லரை 17 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினர் மீட்டனர். வழிதெரியாமல் காட்டில் சிக்கி கொண்ட அவர் இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்திருந்ததாக கூறி உள்ளார்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்தவர் அமண்டா எல்லர். யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ம் தேதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு தனது காரில் சென்றார். பின்னர் அவர் அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை. இதையடுத்து அமண்டா எல்லர் குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர்.ஆனால் அவர் செல்போன், பணப்பையை காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மாயமானதாக கருதி அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அடர்ந்த காடு என்பதால், அமண்டா எல்லரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. 1000-க்கும் மேற்பட்டோர் தேடும் பணியில் ஈடுபட்டும் இந்த பலனும் இல்லை.

இதையடுத்து, அமண்டா எல்லரை கண்டுபிடித்து தருபவருக்கு 50 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அவர்கள் அதோடு நிறுத்தி விடாமல் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமண்டா எல்லர் கண்டுபிடிக்கப்பட்டார். கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே அமண்டா எல்லர் இருப்பதை மீட்பு குழுவினர் கண்டனர். 2 கால்களும் பலத்த காயம் அடைந்த நிலையில் நகர முடியாதபடி அமண்டா எல்லர் அமர்ந்திருந்தார். மேலும் அவர் மிகவும் மெலிந்தும், சோர்வாகவும் காணப்பட்டார். இதையடுத்து, மீட்பு குழுவினர் அவரை பத்திரமாக மீட்க, ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். வழிதெரியாமல் காட்டில் சிக்கி கொண்ட அமண்டா எல்லர் இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்திருந்ததாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து