முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் பதவியேற்ற ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க.எம்.பி.க்கள் ஆதரவு: மேஜையை தட்டி வரவேற்பு கொடுத்தனர்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்ற ப. ரவீந்திரநாத் குமாருக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவார வரவேற்பு அளித்தனர்.

பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று  2-வது நாளாக நடந்தது. நேற்று முன்தினம் 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் நேற்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து சில மாநில எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  வழக்கமாக எம்.பி.க்கள் பதவி ஏற்கும் போது, உளமாற உறுதி கூறுகிறேன் என்று கூறி முடிப்பார்கள். அதன்பிறகு பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நேற்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர்.  தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.

காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க. எம்.பி.க்களை போல தமிழ் வாழ்க என்று கூறினார்கள். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பதவியேற்றதும் உலக தமிழர்களே ஒன்றுகூடுங்கள் என்று முழக்கமிட்டனர்.  தமிழ்நாட்டு எம்.பி.க்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு தமிழை வாழ்த்தி பேசியதற்கு வடமாநில எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் வாழ்க என்று தமிழக எம்.பி.க்கள் சொன்னபோதெல்லாம் அவர்கள் பாரத் மாதாகீ ஜே என்று கோ‌ஷமிட்டனர். என்றாலும், தமிழக எம்.பி.க்கள் தமிழை வாழ்த்தி குறிப்பிட்டு பேச தவறவில்லை. சில எம்.பி.க்கள் வெல்க தமிழ் என்று கூறிச்சென்றனர்.

அ.தி.மு.க. எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டார்.  அப்போது பா.ஜ.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.  தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழியும் தமிழிலேயே பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவர் உறுதி மொழி எடுத்து முடித்ததும் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறினார்.  முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, பழனி மாணிக்கம் மற்றும் நவாஷ்கனி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

வசந்தகுமார் பதவி ஏற்று முடித்ததும் ஜெய் ஜவான், ஜெய் கிஷான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க என்று கூறினார். அத்துடன் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிறைவுபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து