விமானத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது லேண்டிங் கியர்களில் சிக்கிக் கொண்ட ஊழியரின் உடல் வெட்டியெடுத்து மீட்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2019      இந்தியா
spicejet plane 2019 7 10

கொல்கத்தா : கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தின் லேண்டிங் கியர்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஊழியரின் உடல் வெட்டியெடுத்து மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர் ரோகித் வீரேந்திரா, லேண்ட் ஆன விமானத்தின் பராமரிப்புப் பணிகளை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, லேண்டிங் கியருக்கு அருகில் இருந்த கதவு ஹைட்ராலிக் அழுத்தத்தின் காரணமாக திடீரென அவரை உள்ளே இழுத்துள்ளது. இதனை திறக்க ரோகித் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் திறக்க முடியவில்லை. சில மணி நேரங்களான நிலையில் கதவை திறக்க முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளார். நள்ளிரவு என்பதால் அருகில் யாரும் இல்லாமல் தனியே சிக்கியுள்ளார். பின்னர் தப்பிக்க வழியின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ரோகித்தின் சடலம் லேண்டிங் கியர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டது.

பின்னர் இது குறித்து விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்புப் படையினருடன் விரைந்தனர். ரோகித்தின் சடலத்தினை சில மணி நேரம் போராடியும் மீட்க முடியாததால், மருத்துவமனை ஊழியர்களின் உதவியோடு சடலத்தை வெட்டி மீட்டனர். இச்சம்பவம் ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோகித்தின் இறப்பிற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், தகவல் கிடைத்த உடனே, நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எதார்த்தமாக நடந்ததா, இல்லையா என்கிற கோணத்தில் விமான நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து