தமிழகத்தில் ராஜ்யசபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு - சட்டமன்ற செயலரிடம் வெற்றி சான்றிதழையும் பெற்றனர்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
parliament 2019 07 10

சென்னை : ராஜ்யசபை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்யசபையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ராஜ்யசபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சியான பா.ம.க.வுக்கு ஒரு  எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போல தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமை கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒரு  எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பா.ம.க. சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தி.மு.க. சார்பில், சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதனிடையே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மனு எற்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதை தொடர்ந்து  தி.மு.க. சார்பில் 4-வது வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவும் மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சைகள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் சுயேட்சை வேட்பாளர் 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பின்னர் வைகோ மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இளங்கோ தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு 6 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டது.எனவே, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, சட்டமன்றத்தின் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழ்களை 6 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் பெற்றுக் கொண்டனர். சான்றிதழ் பெற்ற அ.தி.மு.க. எம்.பி.க்கள் முகம்மத் ஜான், சந்திரசேகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து