தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் ரூ. 8 ஆயிரத்து 830 கோடி அளவுக்கு முதலீடுகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
cm edapadi interview 2019 09 10

சென்னை : தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில் ரூ. 8 ஆயிரத்து 830 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய பின் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க, தொழில் முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இன்று(நேற்று) சென்னை திரும்பியிருக்கின்றேன். இங்கிலாந்தில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

1. நமது மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறனை மேலும் மேம்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
2.கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
3.டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 108 அவசரகால ஆம்புலன்ஸ் வசதியினை மேம்படுத்திட, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செயல்பாடுகளின் நடைமுறைகளை பின்பற்ற அந்நிறுவனத்துடன் ஆலோசனை செய்யப்பட்டது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் என்சன் நிறுவனத்தில் சூரிய சக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை கண்டறிய அந்த நிறுவனத்திற்கு சென்று ஆலோசனை நடத்தப்பட்டது. இங்கிலாந்து அரசுமுறை பயணத்தை முடித்து அமெரிக்கா சென்ற பொழுது, அமெரிக்க நாட்டில் உள்ள பபல்லோ கால்நடை பண்ணையில், கால்நடை வளர்ப்பு மற்றும் அங்குள்ள தொழில்நுட்பங்களை கேட்டறிந்தோம். தமிழகத்தில் சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்காவிலே இந்தத் தொழில்நுட்ப வசதிகளை புகுத்துவதற்கு அங்கு சென்று பார்வையிட்டோம். அங்கு ஒரு பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கொடுப்பதாக தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட அந்தப் பால்பண்ணையில் ஒரே இடத்தில் 3,000 பசுக்களை வளர்க்கின்றார்கள். அதில், 60 விழுக்காடு பசுக்களிடமிருந்து பால் கறக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, கன்றுகள் வளர்க்கும் முறையை பார்வையிட்டோம். இது ஒரு பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரத்திற்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தன் வாயிலாக ரூபாய் 2,780 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சுமார் 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம், 17,760 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். Haldia Petrochemicals நிறுவனம், Naphtha Cracker Unit- உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கு அந்நிறுவனத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றோம். சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள், விரைவில் சென்னை வந்து என்னைச் சந்தித்து பேசவிருக்கின்றார்கள். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற திட்டத்தை நான் துவக்கி வைத்துள்ளேன். இத்திட்டத்தின் மூலம், வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் புதிதாக தமிழ்நாட்டில் தொழில் துவங்க இயலும். சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திருக்கின்றோம். அதில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படும் போது, 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும். சான் ஹீசே நகரிலும் “யாதும் ஊரே” திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Digital Accelerator திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 50 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மின்சாரத்தில் இயக்கப்படும் கார் தயாரிக்கும் தொழிற்சாலையான டெஸ்லா நிறுவனத்தைப் பார்வையிட்டு, தமிழகத்தில் அந்தத் தொழிற்சாலை வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம். அவர்களும் பரிசீலிப்பதாகவும், விரைவில் தமிழ்நாட்டிற்கு வந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாசில்லா எரிசக்தி தயாரிக்கும் ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தைப் பார்வையிட்டோம். அந்நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ், Anaheim நகரின் மேயரை சந்தித்து கழிவுநீரை சுழற்சி முறையில் எவ்வாறு சுத்திகரிக்கின்றார்கள், அந்நீரை எந்தளவிற்கு பயன்படுத்துகின்றார்கள், அதற்காக என்னென்ன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் பார்வையிட்டோம். அது எவ்வாறு தமிழகத்தில் பயன்படும் என்பதையெல்லாம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினோம். இந்த மறுசுழற்சி முறையை தமிழகத்தில் உருவாக்கி செயல்படுத்துவதற்கு தாங்கள் துணை நிற்பதாக மேயர் தெரிவித்திருக்கின்றார். துபாயில், தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூபாய் 3,750 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கின்றோம். இதில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 10,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. துபாய் தொழில்முனைவோர்களை தொழில் துவங்க தமிழகத்திற்கு அழைத்திருக்கின்றோம். பெரும்பாலான தொழிலதிபர்கள், தமிழகம் தொழில் துவங்க உகந்த மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்கள். அவர்களுக்குத் தேவையான மின்சார வசதி, சாலை வசதி, தண்ணீர் வசதி இருக்கின்றது. மேலும், Single Window System மூலமாக அனைத்து அனுமதியும் ஒரே காலக்கட்டத்தில் கிடைப்பதற்குண்டான வழிவகைகளையும் செய்து கொடுப்போம் என்று தெரிவித்திருக்கின்றோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு முதலீட்டை ஈர்த்திருக்கின்றோம். பல முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வந்து புதிய தொழில் துவங்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் ரூபாய் 8,830 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனால், 37,300 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அவ்வழியில், அம்மாவின் அரசும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், துரைகண்ணு, கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாபா பாண்டியராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதேபோல் விமான நிலையத்தில் ஏராளமான அ.தி.மு.க. வினர் திரண்டு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரை வரவேற்கும் வகையில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நள்ளிரவு வேளையிலும் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். தொண்டர்களின் வரவேற்பை நீண்ட தூரம் நடந்து சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து