முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருப் 2 - 2ஏ பாடத்திட்ட மாற்றத்தால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பில்லை - எதிர்க்கட்சிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி.விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டங்களின் மாற்றத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது நன்மை தான் ஏற்படும் என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்,

குரூப்- 2 தேர்வின் நடைமுறை ஏற்கெனவே இருந்ததுதான். புதிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. எப்போது எல்லாம் எழுத்து தேர்வு இருந்துள்ளதோ, அப்போது முதல் நிலை தேர்வில் இருந்ததில்லை. அந்த முறைதான் தற்போது திரும்பவும் வந்துள்ளது. தேர்வில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நன்மை தான் ஏற்படும். இதனால் தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று அச்சப்படதேவையில்லை. புதிய பாட திட்டத்தினால், தமிழில் படிக்காதவர்கள், எழுத தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னர், பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தேர்வுகள் இருந்தன. தமிழ் தெரியாத ஒருவர் பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்து, தேர்வின் இறுதி வரை தேர்தெடுக்கும் நிலை இருந்தது. தற்போது கட்டாயம் தமிழ் படிக்க, எழுத தெரிந்தவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முறை உள்ளது. தமிழ் தெரியாதவர்கள் இறுதி தேர்வு வரை வர இயலாத நிலை ஏற்படுள்ளது.

முதன்மைத் தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.  குரூப்-2பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள முறையில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பொது அறிவுடன் சேர்த்து உள்ளது. ஒருவர் பொது தமிழ் தேர்வு செய்யலாம். அல்லது பொது ஆங்கிலம் தேர்வு செய்யலாம். நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, தமிழ் தெரியாமல் இறுதி வரை வந்து பணியில் சேர்வதற்கு வாய்ப்பு இருந்தது. இதனை தற்போது மாற்றி அமைத்துள்ளோம். இதன் அடிப்படையில் முதல் நிலை தேர்வில் இரண்டு பாடங்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகம் சார்ந்த வரலாறு, பண்பாடு, இலக்கியம் குறிப்பாக சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை சேர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு மிக முக்கியதுவம் அளிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு பாட திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் சேர்ந்து உள்ளது. முதல் நிலை தேர்வில் பொது தமிழை தேர்வு செய்தவர்கள் இலக்கியம், திருக்குறள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது அறிவு பாடத்திலேயே இது சேர்க்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழில் படித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மாணவர்களும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.

2020-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை ஒரு மாதத்தில் வெளியாகும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையங்களில் மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வில் கேள்விகள் தயார் செய்யப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகவே மேற்கொள்ளப்படும். தேர்வு மையங்கள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. எனவே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பில்லை. இதுவரை அது போன்று நடந்தது இல்லை. கேள்விகள் தவறாக வருவதை குறைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குழு வெளியிடும் அறிக்கையின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து