கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - மகேஷ்பூபதி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      விளையாட்டு
Mahesh Bhupathi  2019 11 07

புதுடெல்லி : டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா உள்ளிட்ட சில வீரர்கள் அறிவித்தனர். அத்துடன் இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு, அகில இந்திய டென்னிஸ் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த போட்டி வருகிற 29, 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடம் மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு கருதி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுவதாக கடந்த திங்கட்கிழமை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. ஆனால் நடைபெறும் இடம் எது? என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிக்கு விளையாடாத கேப்டனாக செல்ல மகேஷ்பூபதி மறுத்ததால் அவருக்கு பதிலாக ரோகித் ராஜ்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.

இதனால் அதிருப்திக் குள்ளாகி இருக்கும் இந்திய அணியின் விளையாடாத கேப்டன் (களம் இறங்காமல் அணியை வழி நடத்துபவர்) மகேஷ்பூபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை நான் பெரிதாக நினைக்கவில்லை. புதிய கேப்டனுக்கான தருணம் இது என்று அவர்கள் சொல்ல முடியும். ஆனால் நான் தேசிய அணிக்காக பணி செய்ய மறுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது என்று நான் உண்மையாகவே நினைத்தேன். அதனை தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனமும் உறுதி செய்து இருக்கிறது.

இனிமேல் நான் கேப்டனாக இல்லை என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எழுத்துபூர்வமான தகவலை நான் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமாபாத் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு ரோகித் கேப்டனாக இருப்பார் என்பது மட்டுமே நான் கேள்விப்பட்டேன். போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த தகவல் வெளியானது. கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருப்பதுடன், நாட்டுக்காக 25 ஆண்டுகளாக விளையாடி இருக்கும் நான் அத்துடன் இந்த ஆட்டத்தை விட்டு ஒதுங்கி இருந்து விடவில்லை. இந்திய டென்னிஸ் முன்னேற்றத்துக்காக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டி வருகிறேன். இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி கொடுத்துள்ளேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் நான் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுங்குவதற்கு தயார். ஆனால் நான் நாட்டு அணிக்காக பணியாற்ற மறுக்கிறேன் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருபோதும் நான் சொன்னது கிடையாது.

பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று சொன்னேனே தவிர, இந்த போட்டிக்கு பணியாற்ற தயாராக இல்லை என்று சொல்லவில்லை. டென்னிசுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள என் மீது தேவையில்லாமல் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். எனது தூண்டுதலில் பேரில் தான் மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் கருதி தான் என் மீது இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மகேஷ்பூபதி விவகாரம் குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது. மகேஷ்பூபதியுடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று அவரே சொல்லி விட்டார். எனவே தான் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்தோம்’ என்றார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து