உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க ரூ 266 .70 கோடி நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi palanisamy 2019 10 15

சென்னை : உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கிட தமிழக அரசு ரூ.266.70 கோடி நிதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது,

கடந்த ஜூலை 16 - ம்தேதி சட்டமன்றப் பேரவை விதி 110 - ன்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவி வழங்கும் திட்டங்கள், 2019-20ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் நாப்கிசான் நிதி நிறுவன உதவியுடன் செயல்படுத்த ரூ.266 கோடி வரை செலவிடப்படும் என அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 2014 - 15 - ஆம் ஆண்டு முதல் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக உருவாக்குவதற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மட்டுமல்லாது. மத்திய சிறு, குறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் நபார்டு போன்ற பிற நிறுவனங்களும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்புகள் உட்பட இது வரை 500 - க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடக்க நிலையிலேயே உள்ளதால், உறுப்பினர்களை அணிதிரட்டுதல், நிறுவன ஒத்திசைவு, சட்ட ரீதியான இணக்கம், தொழில் முனைவோர் திறன், வணிக மற்றும் சந்தைப்படுத்தும் திறன், நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிர்கொண்டு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட, திட்டங்களை செயல்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட திட்டங்களின் மூலம் தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பயன்பெற உள்ளன.

இடைநிலை மூல தன உதவி

 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் துவங்கிய ஆண்டுகளில் அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதன கடன் உதவித் தொகையாக வழங்கப்படும். இந்தத் தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்பு கூட்டி, சிப்பம் கட்டி, தர அடையாளம் வழங்குதல் உட்பட பல்வேறு சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். ஐந்தாண்டு முடிந்த பிறகு மிகக் குறைந்த வட்டியாக ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்துடன் இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பயன்பெறும்.

வங்கியில் கடன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசே வழங்கும் கடன் உத்தரவாதம்  பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன், வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனால் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வங்கிக் கடன் பெறுவதற்கு அஞ்சுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு 50 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும். இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.50 கோடி நிதிய மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வாகும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் இத்திட்டத்தின் பலன்களை பெற்று, வேளாண் வணிகத்தை மேலும் நல்லமுறையில் முன்னேற்ற முடியும்.

சலுகையுடன் கூடிய சுழல் நிதி

 தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு இணையாக 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் திறம்பட வளர்வதற்கும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும் இந்த வட்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் பேரில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செலுத்தும் வட்டி விகிதம் 12 முதல் 14 சதவீதத்திலிருந்து 8 முதல் 9 சதவீதமாக குறைக்க ஏதுவாக, ரூ.166.70 கோடி நிதி நாப்கிஸான் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பங்காக வழங்கப்படும். நாப்கிஸான் நிறுவனம் தன் பங்காக ரூ.333.30 கோடி நிதி ஒதுக்கி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கும். இதன் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஈட்டும் கூடுதல் லாபத்தை மீண்டும் முதலீடு செய்து வணிகத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்ள இயலும்.

ஆக மொத்தம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தி, வணிக ரீதியாக வளரும் வகையில், அரசு இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது. மேற்படி மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்கும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான். தற்போது அரசு அறிவித்திருக்கும் இத்திட்டத்தின் மூலம், சுமார் 1,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு, 10 லட்சம் வேளாண் பெருமக்கள் 4 ஆண்டுகளில் பயன்பெறுவார்கள்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து