முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறுமையாக இருந்தால் விருது நிச்சயம்: தமிழ் அறிஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி சொன்ன குட்டிக்கதை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி சொன்ன குட்டிக்கதை வருமாறு,

சோலையூர் என்ற ஒரு ஊரில் மழை பெய்யாமல், மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடி வந்தார்கள். அந்த நிலையில், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அந்த ஊரில் உள்ள ஒரு செல்வந்தரிடம் வந்தார்கள். அவரிடம், நம் ஊர் பசி, பஞ்சத்தில் சிக்கித் தவிப்பது தங்களுக்குத் தெரியும். பெரியவர்கள் பசியை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால், சிறுவர்கள் என்ன செய்வார்கள், பாவம் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு, அந்த செல்வந்தர், கண்டிப்பாக உதவி செய்கிறேன். நம் ஊரில் எத்தனை சிறுவர், சிறுமியர் உள்ளனர்” எனக் கேட்டார். அப்போது ஊர் பெரியவர் ஒருவர், 40 சிறுவர், சிறுமியர் உள்ளனர்” என்றார்.

உடனே செல்வந்தர், அவர்களை நாள்தோறும் காலையில் என் வீட்டிற்கு வரச் சொல்லுங்கள், ஒரு கூடையில் 40 ரொட்டிகளை வைக்கச் சொல்கிறேன். அவர்கள் ஆளுக்கு ஒன்று எடுத்து பசி ஆறட்டும்” என்றார். அவ்வாறே தினமும் சிறுவர்கள் வந்து ஆளுக்கு ஒரு ரொட்டி எடுத்து தங்கள் பசியை போக்கிக் கொண்டனர். அவ்வாறு ரொட்டி எடுக்கும் போது பெரிய ரொட்டித் துண்டை எடுக்க அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு சிறுமி மட்டும் ஒதுங்கி இருந்து, அனைவரும் எடுத்துக் கொண்ட பின் தனக்கான ரொட்டியை எடுத்துச் சென்றாள்.

சில நாட்கள் கழித்து, அதே போன்று ஒரு நாள் தனக்குக் கிடைத்த சிறிய ரொட்டியுடன் அச்சிறுமி தன் வீட்டிற்குச் சென்றாள். ரொட்டியை பிய்த்துப் பார்த்தபோது, அதற்குள்ளே ஒரு தங்கக் காசு இருந்தது. உடனே அச்சிறுமியின் தாயார், இது செல்வந்தர் வீட்டு தங்கக் காசு, தவறுதலாக ரொட்டிக்குள் வந்துவிட்டது.அதனை அந்த செல்வந்தரிடமே திருப்பிக் கொடுத்து விடு” என்று கூறி அச்சிறுமியை செல்வந்தரிடம் அனுப்பினார்.

அவ்வாறே அச்சிறுமி தங்கச் காசை எடுத்துக் கொண்டு அந்த செல்வந்தரிடம் நடந்ததைக் கூறி திருப்பிக் கொடுத்தாள். அதற்கு செல்வந்தர், சிறுமியே உன் பொறுமைக்கு நான் கொடுத்த பரிசு இது, இதை நீயே வைத்துக் கொள்” என்று கூறி, அந்த தங்கக் காசை சிறுமியிடமே திருப்பிக் கொடுத்தார். சிறுமியும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து தன் வீட்டிற்குச் சென்றாள்.

 

இது போன்று வளர்ந்து வரும் தமிழ் அறிஞர்களும் பொறுமையுடன் காத்திருந்து, தங்களது திறமையை நிரூபித்தால், அந்த சிறுமியைப் போல் உரிய நேரத்தில் உங்களுக்கும் விருது கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து