முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை

புதன்கிழமை, 27 மார்ச் 2024      இந்தியா
Enforcement 2023 05 17

Source: provided

புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறை காவல் ஆகியவை சட்டவிரோதமானவை என்றும், தன்னை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, இந்த வழக்கு தொடர்பான மனு அமலாக்கத்துறையிடம் நேற்று(செவ்வாய்கிழமை)தான் வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய 3 வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, இந்த வழக்கில் காலதாமதம் செய்வதற்காகவே அமலாக்கத்துறை தரப்பில் அவகாசம் கோரப்படுவதாக வாதிட்டார். இந்த கைது விவகாரம் தொடர்பான பல்வேறு அடிப்படை விஷயங்களில் நீதிமன்றத்தின் உடனடி விசாரணை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து