முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்போம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்,ஏப்.22  - இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக எடுப்போம் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதியாக கூறியுள்ளார். இந்தியாவில் வருகின்ற 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பு அங்கு விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இருக்காது. பாராளுமன்ற கூட்டத்தில் முக்கியத்துவம் இல்லாத மசோதாக்கள்தான் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று சர்வதேச நிதி ஸ்தாபன அமைப்பு உயரதிகாரி ஒருவர் கூறியிருந்தார். இந்தநிலையில் வாஷிங்டன்னில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் விரைவான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மெத்தனமாக இல்லை என்றார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு விரைவான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார். நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் பென்சன், வங்கி, இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டுவரப்படும் என்றும் முகர்ஜி கூறினார். இந்த மசோதாக்கள் நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலோ அல்லது அடுத்த பாராளுமன்ற கூட்டத்திலோ நிறைவேற்றப்படும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சட்டத்திருத்தம், நிர்வாக சீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பொருளாதார சீர்திருத்தம் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன என்றார். வாஷிங்டன்னில் உள்ள பீட்டர் ஜி பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தில் பத்திரிகையாளர்களை பிரணாப் முகர்ஜி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு அந்த பொருளாதார நிறுவனம்தான் ஏற்பாடு செய்திருந்தது. அதேசமயத்தில் இந்தியாவில் கூட்டணி ஆட்சி இருப்பதால் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் சவால் ஏற்பட்டுள்ளது என்பதையும் முகர்ஜி ஒப்புக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்