முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - கொழும்பு இன்று முதல் விமான சேவை துவக்கம்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மதுரை, செப். 20 ​- மதுரை - கொழும்பு இடையே இன்று முதல் சர்வதேச விமான சேவை துவங்கவிருக்கிறது. முதல் நாளில் மதுரையில் இருந்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 50 பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு 4 நாள் பயணமாக கொழும்பு செல்கிறது. இது குறித்து சங்கத்தின் முதுநிலை தலைவர் ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்தி வெளிநாடுகளுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என 1996 ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர் முயற்சி எடுத்தது. இதன் பயனாக தற்போது இன்று முதல் தினமும் மதுரை - கொழும்பு இடையே விமான சேவை துவங்கவுள்ளது. 

தனியார் நிறுவனத்தின் விமானம் தினமும் பகல் 12.38 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.35 மணிக்கு கொழும்பு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு மதுரை வந்தடையும். முதல் நாள் பயணத்தில் எங்களது தலைமையில் 50 பேர் கொண்ட குழு கொழும்பு செல்கிறது. நாளை 21 ம் தேதி அங்கு நடைபெறும் கூட்டத்தில் இலங்கை தொழில் வர்த்தக சங்கத்தினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். அக்கூட்டத்தில் இலங்கை தொழில் அமைச்சர் மற்றும் இந்திய தூதரக துணை கமிஷனர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த பயணத்தின் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வாய்ப்பு கிடைக்கும். இதன் தொடர்ச்சியாக மிகின் லங்கா நிறுவனம் மூலம் டிசம்பர் 7 ம் தேதி முதல் விமான சேவை துவங்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை விமான நிலையத்தின் ஓடுதளத்தை அதிகரிக்க தேவையான 614 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் விரைவாக ஆர்ஜிதம் செய்து விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் கார் உதிரிபாகங்களை ஏற்றிச் செல்லக் கூடிய ஜம்போஜெட் ரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதன் மூலம் மதுரையில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் சாலைகள் அமைய வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுடைய விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை விரைவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் அரசு சார்பில் விமானவியல் கல்லூரி துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்