முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,ஏப்.20 - அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தவும், அரசு விடுதிகளில் தங்கிக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் வரும் 13 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசு பணிகள் முடங்கி உள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான சில நடத்தை நெறிமுறைகளை தளர்த்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலர் ஆர்.கே. ஸ்ரீவத்ஸவா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, 

அனுமதி அளிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளை கோரலாம். அதே சமயம் ஒப்பந்தப் புள்ளிகளை சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு அளிக்கும் பொது தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும். உள்ளாட்சி மன்ற கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். மேலும் அரசு வாகனங்களை அமைச்சர்கள் பயன்படுத்திக் கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அவர்கள் சுழல் விளக்குடன் கூடிய வாகனத்தை பயன்படுத்தலாம். ஆனால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. 

மேலும் மாநில அமைச்சர்களோ, மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவோ குறிப்பிட்ட இடங்களை பார்வையிடவோ அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யும் போது தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது. பொதுக்கூட்டங்கள் நடத்த உரிய விதிகளின்படி அனுமதி அளிக்கப்படும். ஆனால் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் பேரணியோ, பொதுக் கூட்டங்களையோ நடத்த கூடாது. அரசு பணிகளை மேற்கொள்ளும் போது அமைச்சர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ளலாம். 

வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாட்களில் இருந்து அதாவது மே 11 ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 15 ம் தேதி வரை விருந்தினர் இல்லங்களில் தங்க அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்