முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநில கல்லூரி மாணவர் தற்கொலை

சனிக்கிழமை, 7 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.7 - காதலியை மறக்காவிட்டால், உன் தாயார்மீது விபச்சார வழக்கு போடச்சொல்வேன் என்று உயர் அதிகாரியாக உள்ள காதலியின் மாமா அடித்து உதைத்ததால்  சென்னை மாநில கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் இந்த திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ராஜேஷ் (19) வசித்து வந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை ஆறுமுகம். தாயார் காமாட்சி. மாணவர் ராஜேஷ் ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) 2​ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்தார். அவர் கரூரைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இந்த நிலையில் மாணவி போன் செய்து ராஜேசை கரூருக்கு அழைத்தார். திருமணம் சம்பந்தமாக எனது பெற்றோர் உன்னுடன் பேச விரும்புகிறார்கள். அதனால் உடனே புறப்பட்டு வா என கூறினாள். காதலி அழைத்த உடன் ராஜேஷ் கரூருக்கு புறப்பட்டு சென்றார். தனது காதல் நிறைவேறி விடும் என மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்தார். கரூருக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காதலியின் உறவினர் ஒருவர் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ராஜேசை அடித்து உதைத்ததோடு போலீசில் ஒப்படைத்து மிரட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவர் வீட்டிற்கு வந்ததும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டார். 

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். ஒரு கடிதம் தாய் காமாட்சிக்கு எழுதி இருந்தார். மற்றொரு கடிதம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு எழுதி இருந்தார். இந்த இரண்டு கடிதங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். செம்மஞ்சேரி போலீசார் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மாணவர் ராஜேஷ் எழுதியுள்ள கடிதத்தில் தான் சாவதற்கு காதலியின் மாமா தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் மாணவரின் பெற்றோர், உறவினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீஸ் கமிஷனருக்கு ராஜேஷ் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:​ என் காதல் நிறைவேற வில்லை. என் காதலி அழைத்ததின் பேரில் கரூர் சென்ற நான் அங்கு சில அவமானங்களை சந்தித்தேன். அவரது மாமா அசோக்குமார். உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் என்னை அடித்து உதைத்ததோடு கரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவளை மறந்து விடு... இல்லையென்றால் உன் அம்மா மீது விபசார வழக்கும் உன் மீது திருட்டு வழக்கும் போட்டு உள்ளே தள்ளி விடுவேன். அவள் உன்னை சந்திக்க விரும்பவில்லை. உன் முகத்தில் விழிக்க பிடிக்கவில்லை. என்று கூறி விட்டாள்... அதனால் அவளை மறந்து விடு என்று அவள் மாமா மிரட்டினார். அவமானம் தாங்க முடியாமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ராஜேஷ் அவரது தாய்க்கு எழுதிய கடிதத்தில், உன் பேச்சை கேட்காமல் நான் கரூருக்கு சென்றேன். அங்கு அவள் உறவினர்களால் அவமானப்பட்டேன். நான் செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடு... அம்மா என்று குறிப்பிட்டுள்ளார். மகனை இழந்த தாய் காமாட்சி கூறுகையில், என் மகன் சாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் அசோக் குமார்தான் காரணம். அவர் அவனை அடித்து அவமானப்படுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டான். மகன் சாவிற்கு காரணமான அதிகாரி உள்ளிட்ட உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போலீசில் சிக்கிய கடிதங்களை தொடர்ந்து வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது. ராஜேஷ் சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் படுகிறது. வேறு பிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து காதலியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்