முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மத்தியஅரசு எடுக்காது- மன்மோகன் உறுதி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 18 - கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.  கர்நாடகத்தை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு கர்நாடக கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை செய்தார். இதனால் பா.ஜ.க. வட்டாரம் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.
பா.ஜ.க தலைமையிலான கட்சி தலைவர்கள் அத்வானி தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கை அத்வானியும் கூட்டணி கட்சி தலைவர்களும் சந்தித்தனர். அந்த சந்திப்புக்கு பிறகு அத்வானி கூறுகையில், கர்நாடக ஆளுனர் பரத்வாஜ் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். அவர் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். இதை கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர் கர்நாடக விவகாரத்தில் அரசியல் சட்டத்திற்கு புறம்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்துள்ளார் என்றார் அத்வானி.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், கர்நாடக ஆளுனரின் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து ஆளுனர் அவசரமாக இந்த பரிந்துரையை அனுப்பி உள்ளார். உள்துறை இந்த பரிந்துரையை பரிசீலிக்கும். கவர்னருக்கும், எடியூரப்பாவுக்கும் தனிப்பட்ட முறையில் மோதல் இருப்பது எங்களுக்கு தெரியும். இதன் காரணமாகவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து 2 நாட்களிலேயே பரத்வாஜ் இந்த பரிந்துரையை அனுப்பி உள்ளார். எனவே கர்நாடகத்தை பொறுத்தவரை ஆளுனரின் அறிக்கை அடிப்படையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என்று தெரிவித்தன. இதனிடையே கவர்னர் அனுப்பியுள்ள பரிந்துரையை அடுத்து கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்