முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்திராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளஸ் 2 சிறப்பு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத `எச்' வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். 

10-ம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும், 1.9.2011 அன்று 16வயதும் 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இதற்கு எச்.பி.வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். தொழிற்கல்வி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதால் மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தொழிற்கல்வி பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாடத் திட்டத்தின்படி தேர்வு எழுத செப்டம்பர் 2011 மற்றும் 2012 ஆகிய இரு பரவங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

முதல் முதலாக பிளஸ் 2 தேர்வு எழுதும் பி.எச். வகை நேரடி தனித் தேர்வர்கள் பகுதி-1, பகுதி-2 மொழி பாடங்களுடன் 2005- 2006-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாட திட்டத்தின்படி அமைந்துள்ள 5 பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்வு எழுத முடியும். தேர்வுக்கு விண்ணப்ப படிவங்களை 8-ந் (தேதி திங்கட் கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் கிடைக்கும். 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 12-ந் தேதிக்குள் (வெள்ளிக் கிழமை) அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

சிறப்பு தேர்வு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி முடிவடையும். தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:-

செப்டம்பர் 21-ந்தேதி- மொழித்தாள் 1, 22-ந்தேதி - மொழித்தாள் 2, 23-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள், 24-ந்தேதி- ஆங்கிலம் 2-ம் தாள், 26-ந் தேதி- இயற்பியல், வணிகவியல், உளவியல், சுருக்கெழுத்து (தமிழ்- ஆங்கிலம்), 27-ந் தேதி- வேதியியல், பொருளாதாரம், தொழிற்கல்வி பாடங்கள். 28-ந் தேதி- உயிரி வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அரசியல் அறிவியல், தகவல் தொடர்பு ஆங்கிலம், மனையியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ்- ஆங்கிலம்). 

29-ந் தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், நுண்ணுயிரியல், சிறப்பு மொழித்தாள், 30-ந் தேதி- கணிதம், கணக்கு பதிவியல், விலங்கியல், அடிப்படை அறிவியல், புவியியல். அக்டோபர் 1-ந் தேதி- வணிக கணிதம், இந்திய கலாச்சாரம், நர்சிங்(பொது), நியூட்ரிஷன்  மற்றும் டயட்டிக்ஸ்.

இவ்வாறு வசுந்திராதேவி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்