முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மழை - வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 49 பேர் பலி?

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக  ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லுமாறும் அரசு நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
 
இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஜீலம் நதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய காலை நிலவரப்படி, வெள்ள அளவு அனந்தநாக் மாவட்டம் சங்கம் பகுதியில் 22.8 அடியாகவும், ராம் மனுஷி பாக் பகுதியில் 19 அடியாகவும், பந்திபூரா மாவட்டம் ஆஷிம் பகுதியில் 11.55 அடியாகவும் இருந்தது. வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாவட்ட நிர்வாக அதிகாரி,
வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு வருமாறும், மாவட்ட நிர்வாகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜீலம் நதிக் கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

ராஜ்பாக், ஜவஹர்நகர், கோக்ஜிபாக், வாசிர்பாக் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் கூடுதலாக இருப்பதால், இப்பகுதிகளில் வாழும் மக்கள் நேற்று முன்தினம் மாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கினர். ரெசிடன்ஸி சாலை, லால் சவுக் பகுதிகளில் உள்ள வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் ஜீலம் நதியின் கோரத் தாண்டவத்தில் சிக்கிய பகுதிகளில் இவைகளும் அடங்கும்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழை காரணமாக சிரார் இ சரீப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கு 18 வீடுகள், 44 கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 16 பேரை காணவில்லை. மேலும் மழை வெள்ளத்தில் சிக்கிய 21 பேரும் மாயமாகி விட்டனர். பட்காம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 3 வீடுகள் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 12 பேரும் புதைந்திருக்கலாம் என்று தெரிகிறது. மொத்தம் 49 பேர் பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது. கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
|
ஸ்ரீநகர்-குல்மார்க், ஸ்ரீநகர்-குப்வாரா, ஸ்ரீநகர்-பந்திப்பூரா இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதுக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளம் காரணமாக மாநிலத்தின் 7 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 100 பேர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.  பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் 50 பேர் வீதம் 2 குழுக்களாக மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் தலைவர் ஓ.பி.சிங் கூறியுள்ளார்.

வெள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி காஷ்மீருக்கு விரைந்துள்ளார். காஷ்மீருக்கு புறப்படும் முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நக்வி, வெள்ள நிவாரண, மீட்புப் பணிகளில் காஷ்மீர் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து