முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமிரியில் விஐடி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்நிறைவு விழாவில் பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள்: வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் 6 நாட்கள் திமிரி ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்றது.அதன் நிறைவு விழாவில்பல்வேறு பள்ளிகளுக்கு விஐடி சார்பில் நோட்டு புத்தகங்களை வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார். விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் திமிரி ஒன்றியத்தில் 6 நாட்கள் நடைபெற்றது. இதில் விஐடியில் பயிலும் பல்வேறு மொழிகள் பேசும் 483 மாணவமாணவியர் பங்கேற்றனர். இவர்கள் இவ்ஒன்றியத்தைச் சேர்ந்த விளாப்பாக்கம், திமிரி, வெங்டாபுரம், புங்கனூர், வரகூர் புதூர், ஆணைமல்லூர், ஆயிரமங்கலம், நம்பரை, பரதாமி, குண்டலேரி, பழையனூர் ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கில மொழி கணிதம் மற்றும் கணிணி பயிற்சி அளித்ததுடன் சாலை விதிகள் பற்றி எடுத்து கூறினர். பாரத பிரதமரின் கிளின் இந்தியா திட்டத்தை வலியுறுத்தி அந்த ஊராட்சிகளில் உள்ள வீடுகளில் கழிப்பிட பராமரிப்பு மற்றும் சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வை அளித்தனர். அத்துடன் விஐடி சுகாதார மையத்தின் மூலம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையினரின் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலக துணையுடன் சீமை கருவேல மரங்களை அழித்தல சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. முகாம் நிறைவு விழா திமிரி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியை எஸ்.மைதிலி வரவேற்றார். முகாமில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.ராஜசேகரன் விளக்கி கூறினார். விழாவிற்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுநாதன் தலைமை வகித்து அரசு பள்ளிகளுக்கு விஐடி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கி பேசியதாவது: விஐடி மாணவர்கள் கிராமபுறங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ளனர. நகர்புறங்களில் இருந்து வந்துள்ள இவர்கள் கிராமபுற மக்களை சந்தித்து அவர்களின் பழக்க வழக்கங்கள், வேளாண்மை பணி பற்றி அறிந்துள்ளனர். இந்திய நாடு கிராமங்களில் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன இவைகள் வளர்ந்தால் தான் நாடு வளர முடியும். கிராமங்களில் தண்ணிர் பிரச்னை உள்ளது மன்னர் காலத்தில் ஏரிகள் குளங்கள் அமைக்கப்பட்டன 40 ஆயிரம் ஏரி குளங்கள் அமைத்தனர். வேலூர் மாட்டத்தில்1200 ஏரிகள் உள்ளன. இவற்றை தூர் எடுத்து கால்வாய்கள் சீரமைத்தால் மழை நீரை சேமிக்க முடியும். இவைகள் சீரமைக்கப்படாததால் 2015ம் ஆண்டு டிசம்பரில் வழக்கத்துக்கு அதிகமாக மழை பெய்ததில் சென்னை கடலூர் மாவட்டங்கள் முழ்கின. மத்திய அரசு கிராமபுற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ் நாட்டிற்கு அதில் ரூ.4 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் அதகாரிகள் அரசியல்வாதிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் நீர் வளம் பெருகி விவசாயம் பெருகும் உணவு உற்பத்தி அதிகரிக்கும். கிராமபுற பொருளாதாரம் மேம்பாடு அடைய வேளாண்மை வளர்ச்சி அடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் விஐடி மாணவர் நலன் இயக்குநர் முனைவர் அமித் மகேந்திரகர் மற்றும் திமிரி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கேசவன் ஜெயபால் ஏகாம்பரம் கீழ்பாடி ரமேஷ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர். முடிவில் பேராசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்