முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச பால் தர பரிசோதனை விழிப்புணர்வு முகாம் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட உணவுபாதுகாப்புத்துறையின் சார்பில் இலவச பால்பரிசோதனை விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்து  அறிந்து கொள்ள ஏதுவாக, சிறப்பு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில்  உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பொதுமக்கள் உட்கொள்ளும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து அவ்வப்போது அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது.  இந்நிலையில் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தியாவசியத் தேவையான பாலின் தரம் குறித்து பரிசோதனை செய்திட தயாரிக்கப்பட்டுள்ள புதிய எந்திரம்  மூலம் மாநிலத்திலேயே இரண்டாவது மாவட்டமாக நமது மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 இந்த இயந்திரமானது 100 சதவீதம் கணினிமய தானியங்கி கருவியாகும்.  இக்கருவியின் மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் பாலின் தரத்தையும், கலப்படம் ஏதும் உள்ளதா? என்பதை மிக துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது.  அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் இந்த சிறப்பு உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் ராமநாதபுரம் நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தாங்கள் பயன்படுத்தும் பால் மாதிரிகளை பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
 மேலும் இச்சிறப்பு முகாம் வரும் 6-ந் தேதி வரை (விடுமுறை நாட்கள் தவிர) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு தாங்கள் பயன்படுத்தும் பாலின் தரம் மற்றும் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எம்.ஜெகதீஸ் சந்திரபோஷ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து