முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு டொமினிக், மேடிசன் கீஸ் முன்னேற்றம்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர்...

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

டொமினிக் வெற்றி

ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

நினைத்தது இல்லை

பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

மரின் சிலிச் வெற்றி

முன்னதாக நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

மேடிசன் கீஸ் வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்லோனே ஸ்டீபன்ஸ்...

மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து