முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறுகிறது.கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு நடுவே, ராமஜென்ம பூமி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1994-இல்  ஒரு தீர்ப்பை வழங்கியது. இதற்கு எதிராக பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.ஆனால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொழுகை நடத்துவதற்கு மசூதி அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுவதை சுட்டிக்காட்டி கடந்த 1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கை விரைவான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் 3 நீதிபதிகள் அமர்வு,அக். 29ம் தேதி விசாரிக்கும் என கடந்த மாதம் 27 ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்தது. தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை இரண்டு மாதம் ஒத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்விலேயே விசாரிப்பதா? தினமும் வழக்கின் விசாரணையை நடத்தலாமா என்பவை குறித்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட், பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக விசாரணையும் நடைபெறும் என  உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து