முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வரும் 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25-ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தில் நடைபெறவுள்ளது.

டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள நீர் வள ஆணைய வளாகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 25-வது கூட்டம், குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பாக தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற் பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காவிரி நதி நீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களைச் சமர்ப்பித்தனர். காவிரிப் படுகையின் நீரியல் விஷயங்கள் குறித்தும், மழைப் பொழிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய நீர்வள ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், இக்கூட்டம் சுமுகமாகவும், திருப்திகரமாகவும் நடைபெற்றது. கூட்டத்தின் போது காவிரிப் படுகையில் உள்ள நீரியல் சூழல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டன. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர், வெளியேறும் நீர், தண்ணீர் இருப்பு, மழையளவு போன்ற புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. விவசாயத் தேவைக்கான நீர் விவரங்கள், தொழில்நுட்ப விவரங்கள், நீண்டகால அடிப்படையில் நிர்வாக அமைப்புமுறையைச் சிறந்த வகையில் கொண்டு செல்வது ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தன.

இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஆர்.கே. ஜெயின் தலைமையில் வரும் 25-ம் தேதி நடைபெறவிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணையத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் ஓர் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  இதற்கான மாதாந்திர நீர் அட்டவணையையும் தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு டி.எம்.சி. நீர் காவிரியில் திறந்துவிடப்பட வேண்டும். தமிழகத்தின் நீர் அளவிடப்படும் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு போதிய நீர்வரத்து இருந்ததாக கடந்த கூட்டங்களின் போது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து