முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத், லக்னோவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புதிதாக 3 சிங்கங்கள் விரைவில் வருகை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      இந்தியா
Vandalur Park 2022 12 04

Source: provided

சென்னை ; சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத் மற்றும் லக்னோவிலிருந்து விரைவில் 3 புதிய சிங்கங்கள் வர உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2019-21ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த காலகட்டத்தில் வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நீலா என்ற 9 வயது பெண் சிங்கமும், பத்மநாபன் என்ற 12 வயது ஆண் சிங்கமும், கவிதா என்ற பெண் சிங்கமும் உயிரிழந்தன. கடந்த ஜூன் மாதம் பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற ஆண் சிங்கமும், ஜூலை மாதம் புவனா (எ) விஜி  பெண் சிங்கமும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தன. கடந்த 2017-ல் பெண் சிங்கம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

தொடர்ந்து, சிங்கங்கள் உயிரிழந்த காரணத்தினால் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால், பார்வையாளர்கள் பேட்டரி வேன் மூலம் சிங்கங்களை சென்று பார்க்கும் வசதி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பார்வையாளர்கள் பேட்டரி வேன் மூலம் சிங்கங்களை சென்று பார்க்கும் வசதியை மீண்டும் ஏற்படுத்தவும் பூங்கா நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மற்ற மாநிலங்களில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கடிதம் எழுதியது. இதனை தொடர்ந்து, பரிமாற்ற திட்டத்தின் கீழ் சிங்கங்களை பெறுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து, குஜராத் உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இந்த மாத இறுதியில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த இரண்டு சிங்கங்களுக்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து குஜராத் உயிரியல் பூங்காவிற்கு இரண்டு வெள்ளை புலிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு பெண் சிங்கம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் வண்டலூர் பூங்காவுக்கு மிக விரைவில் கொண்டு வரப்படுகிறது. இதற்கு பதில் லக்னோ உயிரியல் பூங்காவிற்கு ஒரு வெள்ளை புலி அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும், மூன்று சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு வந்தவுடன் சிங்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து