முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயாளிகளுக்கும் டாக்டர்களுக்கும் பாலமாக இருப்பது செவிலியர்கள்தான்

திங்கட்கிழமை, 14 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.​- 14 - நோயாளிகளுக்கும் டாக்டர்களுக்கும் பாலமாக இருப்பது செவிலியர்கள்தான் என உலக செவிலியர் தின விழாவில் ஒடிசா முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன் பேசினார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமையன்று உலக செவிலியர் தின விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தலைமை வகித்தார். கெளரவ விருந்தினராக ஒடிசா மாநில முன்னாள் கவர்னர் எம்.எம்.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாடு முன்னேற அந்நாட்டில் சுகாதார வளர்ச்சி என்பது மிக முக்கியம். சுகாதார வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் உடல் நலம் சார்ந்ததுதான். இந்தியாவில் 45 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பங்களாதேஷ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளை பாதுகாப்பதில் செவிலியர்களின் பங்கு முக்கியமாகிறது. மேலும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையம் போன்றவற்றில் செவிலியர் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர். எனவே செவிலியர்கள் கிராம மக்களிடம் தரமான வாழ்க்கை மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கும் டாக்டர்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் செவிலியர்கள்தான். நோயாளிகளுடன் டாக்டர்களைவிட செவிலியர்கள்தான் நேரடி தொடர்பில் உள்ளார்கள். மருத்துவத்தை முழுமையாக செயல்படுத்துவது செவிலியர்கள்தான். அப்படிப்பட்ட மிக முக்கிய பணியான செவிலியர்களுக்கு சிறந்த தரமான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் இவ்வாறு எம்.எம்.ராஜேந்திரன் பேசினார். நிகழ்ச்சியில்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 டாக்டர்களுக்கும் 27 செவிலியர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும். சிறந்த டாக்டர்களுக்கான விருது 19 பேருக்கும் சிறந்த செவிலியருக்கான விருது 35 பேருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நர்சிங் கல்லூரி ஆசிரியர்களுக்கான விருது 31 பேருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எஸ்.கே.ராஜன். வெங்கடேஸ்வரா நர்சிங் கல்லூரியின் முதல்வர் என்.ஜெயா. மியாட் நர்சிங் கல்லூரியின் முதல்வர் ஆனிகிரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவ பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர். லெட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். டாக்டர். புஸ்பகலா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்