முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்க முடியாத நிலை

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், ஜூலை.16 - காமராஜர் பிறந்த தினத்தை நாம் தமிழர் கட்சி பெருந்தலைவர் திருவிழாவாக நாகர்கோவிலில் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சியை உண்மையாக, நேர்மையாக இந்த மண்ணுக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம். பெருந்தலைவர் பயணித்த வழித்தடத்தில் நாங்கள் பயணிக்கிறோம். ஊழலற்ற நேர்மையான, உண்மையான மக்களாட்சி தந்த தலைவரின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம். கர்மவீரர் காமராஜர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார், பொன் முத்துராமலிங்கதேவர், மருதுபாண்டியர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவன், தீரன் சின்னமலை, இரட்டை மலை சீனிவாசன், வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கம் இந்த தலைவர்கள் எல்லாம் சாதிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் பொதுவுடைமை தலைவர்களாக நமது முன்னோர்களாக அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்துவது, விழாக்களை நடத்துவது நாம் தமிழர் கட்சியின் கடமையாகும், பண்பாடாகும். எங்கள் பாட்டனார்களை நாங்களே மதிக்கவில்லை என்றால் யார் மதிப்பார்கள்? ஆகவே தான் அவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். வருங்கால சந்ததியினருக்கு அவர்களின் பண்பினை, வீரத்தை, உணர்வை அடையாளம் காட்டுகிறோம். 

இந்த  குமரி மாவட்ட மக்களால்  குமரி தந்தை என்று அழைக்கப்படுகின்ற  மார்ஷல் நேசமணிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நெடுநாளைய விருப்பம். அதை உடனே அமைத்து தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறது. 

மேலும் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைவதற்கு பாடுபட்ட பொன்னப்பா நாடாரையும் நினைவு கூர்ந்து அவருக்கு திருவுருவ சிலையும் நிறுவ வேண்டும் என்று நாங்கள் இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். 

இலங்கைக்கு தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து தேவையற்றது. அவசியமில்லாதது. ஆகவே தான் தமிழக அரசு அந்த விழாவை 

புறக்கணித்தது. அப்படி என்ன அவசியம் வேண்டி இருக்கிறது இங்குள்ள விளைச்சலை அங்கே கொடுப்பதற்கு அங்குள்ள பொருட்களை இங்கே கொண்டு வருவதற்கு? என் மக்கள் துன்பப்பட்டு துயரப்பட்டு உயிரையும் உடமையும் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் படகையும், கட்டுமரத்தையும் ஏன் நீந்தியும் கரை சேர்ந்தனர். அப்போது எல்லாம் ஏற்படுத்தாத இந்த படகு போக்குவரத்து இப்போது என்ன அவசியப்பட்டது. 100 ஆண்டுகளாக இல்லாத இந்த படகு போக்குவரத்துக்கு இப்போது என்ன தேவை வந்தது? உலக நாடுகளே இலங்கை செய்த போர்க்குற்றம் தவறானது என்று குற்றம் சாட்டும் பொழுது இந்தியா மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறது. அந்த போர்க்குற்றத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லலாம் அல்லது எதிர்க்கிறேன் என்று சொல்லலாம் எதுவுமே சொல்லாமல் மெளனம் சாதிப்பது இந்தியாவில் இருக்கும் 9 கோடி தமிழர்களையும் இளிச்சவாயன்களாக நினைப்பது. 9 கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வு தான் அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். ஒரு மாநில அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது மத்திய அரசு. இதை விட வேதனை போருக்கு முன்னர் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளித்தது. இன்னும் இந்த பயிற்சி தொடர்கிறது. இது தான் பெரிய சேட்டையாக தெரிகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளே சொல்கிறார்கள் இலங்கை ராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்கு தான் என்று கூறியுள்ளார். 

டெல்லியில் நேற்று குண்டு வெடித்து 18 பேர் பலி. மருத்துவமனைக்கு சென்று மன்மோகன்சிங் பார்க்கிறார், சோனியா காந்தி பார்க்கிறார். ஆளாளுக்கு போட்டி போட்டு துக்கம் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கை சிறிய நாடு. அந்த நாட்டில் வாழ்ந்த என் மக்கள் 554 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போய் பார்த்தார்களா இவர்கள்? துக்கம் தான் விசாரித்தார்களா? இவ்வளவு ஏன் இறந்தது தமிழர்கள் ஆனால் இவர்கள் துக்கம் விசாரித்ததோ சிங்களனிடம். 

எழவு விழுந்து வீட்டில் போய் துக்கம் விசாரிக்காமல் கொன்றவன் வீட்டில் போய் துக்கம் விசாரித்தார்கள். தமிழர்களின் உயிரை மதிக்கவில்லை. இதையெல்லாம் விட நீலகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை இவைகளுக்கு இடையூறாக இருக்கிறது வீடுகள் என்று சொல்லி அந்த வீட்டில் வசித்தவர்களுக்கு தனியாக குடியை மாற்று வாரியத்தில் இருந்து வீடு தருகிறோம். அந்த குடிசை வீடுகளை விட்டு மாறுங்கள் என்று கூறுகிறார்கள். யானை, புலி போன்ற மிருகங்களுக்கு கொடுக்கிற மரியாதையை கூட தமிழனுக்கு கொடுக்கவில்லை அரசு. 

யாரை கேட்டாலும் இலங்கையில் தமிழனுக்கும், சிங்களனுக்கும் நடக்கிற இந்த போராட்டாம், இந்த பிரச்சனை பல நாட்களாகவே இருக்கிறது என்கிறார்கள். அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தானே நாங்கள் சொல்கிறோம். கடலில் மீன்பிடிப்பதில் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக்கொலை, குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொலை, நாகை மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொலை இப்படி மாவட்டத்துக்கு பெயரை மட்டும் முன்னாடி வைத்த மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது மீனவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் அல்ல, தமிழனின் மீது நடத்தப்படுகிற தாக்கல். கேரளாவிலும் மீனவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லை தாண்டுவதில்லையா? சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி மீனவனை சுடவில்லை, தமிழனை சுடுகிறது. 

சமச்சீர்கல்வியை அ.தி.மு.க. அரசு எதிர்க்கவில்லை. அதனுடைய பாடத்திட்டங்கள் தரமாக இல்லை. கடந்த கால ஆட்சிக்கு புகழுரை வடிப்பது போன்று இருக்கிறது. ஆகவே அந்த பாடத்திட்டங்களை மாற்றபடவேண்டும். தரமான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதை இந்த ஆண்டே செய்வதற்கு போதுமான காலங்கள் இல்லை. ஆகவே இந்த ஆண்டு பழைய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டு சமச்சீர்க்கல்வியை கொண்டு வருவோம் என்கிறது அ.தி.மு.க. அரசு. 

உண்மையிலேயே எங்களை பொறுத்தவரைக்கும் சமச்சீர்க்கல்வி என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இருந்தால் போதாது. கட்டிடவசதி, கழிப்பறை வசதி, விளையாட்டுத்துறை வசதி என எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் சமமாக இருக்க வேண்டும் என்பது தான் சமச்சீர்க்கல்வியின் நோக்கம். அதை செய்யவில்லை இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள். ஆகவே அ.தி.மு.க. அரசு அதனை கொண்டு வந்த பிறகு இதனை நிறைவேற்றலாம் என்று நினைத்திருக்கலாம். கல்வி வர்த்தகமாகி விட்ட இந்த நிலையில் தமிழக அரசு அரசு பள்ளிகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். 

இந்திய ஜனநாயகம் மாற்றப்பட வேண்டும். தேர்தல் முறைகளும் மாற்றப்பட வேண்டும். எனது நாட்டின் முதல் குடிமகனை நான் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் தான் வாழ்கிறேன். மத்தியில் ஆளுகின்ற கட்சியும், எதிர் கட்சியும் வேட்பாளரை நிறுத்துவார்களாம். ஆளும் கட்சிக்கு எவர் தலையாட்டுகிற பொம்மையாக இருப்பாரோ அவர் ஜனாதிபதியாம். இதை போலவே அவல நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூடி உருவாக்கிய மத்திய அரசு நினைத்தால் மக்கள் ஒருமித்த உணர்வோடு வாக்களித்த மாநில அரசை கலைத்து விட முடிகிறது. வாக்காளரை அவமதிக்கிற இதுபோன்ற செயல் வேறு எங்கும் உண்டா? இது குடிமக்களின் வாக்குரிமையை அவமதிக்கிற செயல். இதையெல்லாம் விட வேதனை தாங்களுக்கு தேவையானவர்களை அவன் கொள்ளைக்காரனாக இருந்தாலும், கொலைக்காரனாக இருந்தாலும் சரி அவர்கள் நினைத்தால் இவர் ராஜ்யசபா எம்.பி. ஆகி விடுகிறார். அதனை வைத்து மத்திய அரசின் அமைச்சராகவும் ஆகிவிடுகிறார். இந்த மாதிரியான இழிநிலை வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது. இந்தியாவில் இருக்கிற ஒட்டுமொத்த ஜனநாயக மரபுகளும், தேர்தல் முறைகளும் மாற்றப்பட வேண்டும் இதை தான் வலியுறுத்துகிறது நாம் தமிழர் கட்சி. 

திரைப்படத்துறை தேர்தலுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. மது ஒழிப்பு முறையை நாங்கள் வலியுறுத்துவதில்லை. நாம் தமிழர் கட்சி மாற்றத்தை விரும்புகிற கட்சி. தமிழர்களுக்கு எதிரி சிங்களம் என்பது தற்போது கண்ணுக்கு தெரிந்தது. ஆனால் அதற்கு முன்பே எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல ஒன்று ஜாதி, இன்னொன்று மதம் இவை இரண்டும் தான் முக்கியமான எதிரி. இவைகள் களையப்பட்டு தமிழனாக ஒன்றுப்பட வேண்டும் என்பது முன்னோர்கள் நினைத்தது. அதை நாங்கள் செய்கிறோம். இது தான் நாம் தமிழர் கட்சியின் நோக்கம். இது புதிதாக தோன்றிய கட்சி அல்ல. ஆதித்தனார் ஐயா அவர்கள் இதை தோற்றுவித்தார், உருவாக்கினார். பின்னர் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. காரணம் தமிழன் ஒன்றுப்படவில்லை. இப்போது நாங்கள் அதற்கு முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கனிமாறன், திருமேனி உதயம் உள்பட பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்