முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே திருமணம்

சனிக்கிழமை, 13 நவம்பர் 2021      உலகம்

செய்து கொள்ள அனுமதி
லண்டன் : இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை நாடு கடத்தி அவரை தண்டிக்க அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.  இதனிடையே அசாஞ்சே ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த போது அவருக்கும் தென்ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீலான ஸ்டெல்லா மோரிஸ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த ஜோடிக்கு 2 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே தனது காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். ஆனால் இது குறித்து சிறை அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் சிறை ஆளுநர் மற்றும் நீதித்துறை செயலாளர் ஆகிய இருவரும் தங்களின் திருமணம் நடைபெறாமல் தடுக்க முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஸ்டெல்லா மோரிஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் அசாஞ்சே மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகிய இருவரும் சிறையில் திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இதனை உறுதி செய்துள்ள ஸ்டெல்லா மோரிஸ் இனி தங்களின் திருமணத்தில் எந்த குறுக்கீடும் இருக்காது என நம்புவதாக தெரிவித்துள்ளார். எனினும் இருவரின் திருமணம் நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து