முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திர தினத்தின் மகிமைகள்

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும், உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் தான் சிவ பெருமான் - பார்வதி திருமணம், முருகன் -தெய்வானை, ராமன் - சீதை, ரங்கமன்னார் - ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம், பிரசன்ன வேங்கடேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அற்புதமாக நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் நாம் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய நாள் பங்குனி உத்திரம்.  அதோடு மகாலட்சுமி, தர்ம சாஸ்தா, அர்ஜுனன் போன்றோர்கள் அவதரித்த தினமாக கருதப்படுகிறது.

திருமகள் கல்யாணசுந்தர விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம்பிடித்த நாள். கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில் தான். உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திர பகவான் இந்த நன்னாளில் கலையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். இந்த சமயத்தில் சந்திரனை வணங்கினால் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே போல் வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில் தான்.

பங்குனி உத்திரம் அன்று திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், புதிய பொருட்களை வாங்குதல், பூ முடித்தல், புதிய சிகிச்சை சொல்லுதல், செடி நடுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், வேலையில் சேருவது, வியாபாரம் தொடங்குவது, புதிய இடத்திற்கு மாறுவது, போர்ப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் நீர் நிலைகளை உருவாக்குவது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு மிகவும் சிறந்த நாளாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. எனவே இந்த நாளில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளும்போது அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்புப் பெற்ற நன்னாளான பங்குனி உத்திரம் இந்த 2022-ம் ஆண்டு மார்ச் 18 அன்று வருகிறது. எனவே அந்நாளில் சிவாலயம் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து