முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் நாளை 3 வது கட்ட தேர்தல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.26 - மேற்கு வங்க மாநிலத்தில் நாளை புதன் கிழமை 3 வது கட்ட தேர்தல் 75 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கவிருக்கிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 18 ம் தேதியும், 2 ம் கட்ட தேர்தல் கடந்த 23 ம் தேதியும் நடந்து முடிந்துள்ளன. 3 வது கட்ட தேர்தல் இம்மாநிலத்தில் உள்ள 75 தொகுதிகளில் நாளை நடக்கவிருக்கிறது. 

கொல்கத்தா வடக்கு, கொல்கத்தா தெற்கு மற்றும் பர்கானா மாவட்டங்களில் இந்த தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக இந்த தொகுதிகளில் கம்யூனிஸ்டு தலைவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இ. கம்யூனிஸ்டு அடங்கிய இடது சாரி வேட்பாளர்களுக்காக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பிரச்சாரம் செய்தார். நான் எப்போதும் கம்யூனிஸ்டுகாரன்தான். அதனால் இடதுசாரி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வேன் என்று ஏற்கனவே சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருந்தார். 

அதன்படி அவர் தனது பிரச்சாரத்தை துவக்கினார். கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் சிறிது காலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்த சோம்நாத் சாட்டர்ஜி தற்போது பிரச்சார களத்திற்கு வந்துள்ளார். கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்த அவர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் எதிர்காலம் பாழாகி விடும் என்று மேற்கு வங்க மக்களை எச்சரித்தார். இந்த நிலையில்தான் நாளை 75 தொகுதிகளில் 3 ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மே மாதம் 3 ம் தேதி 4 ம் கட்ட தேர்தல் நடக்கிறது. 6 கட்ட தேர்தல்களும் முடிந்த பிறகு மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அப்போது வெற்றி பெறப் போவது கம்யூனிஸ்டா அல்லது மம்தா பானர்ஜியா என்பது தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்