முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      ஆன்மிகம்
Palani-Murugan 2023 03 22

Source: provided

பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 3-ம் திருக்கல்யாணமும், 4-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. 

மேலும் கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்து அபிஷேகம் செய்வது பழனி முருகன் கோவிலில் சிறப்பு அம்சமாகும். புகழ்பெற்ற இந்த திருவிழா, உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று  (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் அன்றையதினம் மலைக்கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டும் நடைபெறுகிறது. 

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம், 4-ம் தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ம் தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து