முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
1-Ram-59

Source: provided

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது வெண்கலப் பதக்கம் இது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். பிரான்ஸ் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இதில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451. 4 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஒய்.கே. லூ 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான சாதனை, இந்தியாவை பெருமைப்படுத்தியது மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் அவரது நிபுணத்துவத்தை எடுத்துரைத்துள்ளது. 

இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற பிறகு ஸ்வப்னிலின் தந்தை தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

காலிறுதிக்கு முந்தை சுற்றுக்கு

எச்.எஸ். பிரனாய் முன்னேற்றம்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்த டுக் பாட் லி ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்தி, பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதிக்கு முந்தின சுற்றில், அடுத்து விளையாட உள்ளார்.

இந்த போட்டியில் இந்திய வீரரான பிரனாயும், மற்றொரு இந்திய வீரரான லக்சயா சென்னும் விளையாட உள்ளனர். இதில் சோகத்திற்குரிய விசயம் என்னவெனில், இந்திய வீரர் ஒருவர் நாளை போட்டியில் இருந்து வெளியேறுவார். எனினும், ஒருவர் காலிறுதிக்கு முன்னேறுவார். இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களான பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் இருவரும் முறையே மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஹாக்கிஅணி தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிஆட்டத்தில் இந்திய அணி வலுவான பெல்ஜியத்துடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இருப்பினும் பிற்பாதி ஆட்டத்தில் பெல்ஜியத்தின் கை ஓங்கியது. அந்த அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இந்திய அணி கடுமையாக போராடியும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முழு நேர ஆட்ட முடிவில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது.

குசாலேவுக்கு பிரதமர் வாழ்த்து

பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) துப்பாக்கி சுடுதலின் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்று இந்திய வீரர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 துப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பாராட்டுகள். ஸ்வப்னில் குசாலே தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதால் பதக்கம் கிடைத்தது. 50 மீட்டர் ரைபிள் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை ஸ்வப்னில் பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்வது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

இந்திய வீராங்கணைகள் ஏமாற்றம்

7-வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிப்ட் கவுர் சம்ரா மற்றும் அஞ்சும் மோட்கில் கலந்து கொண்டனர். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்கில் 18-வது இடமும், சிப்ட் கவுர் சம்ரா 31-வது இடமும் பெற்று தோல்வியடைந்தனர். இதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் ஏமாற்றம் அளித்தனர். 

நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் நிகத் ஜரின் போட்டியிட்டார். உலக சாம்பியனான நிகத் ஜரின், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். அவர், நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை வு யுவிடம் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரின் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். இதனால் ஒலிம்பிக்கில் நிகத் ஜரினின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஜெர்மனி வீரரான டி. கோபரை எதிர்கொண்டார். இதில் 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

பிரேசில் வீராங்கணை வெளியேற்றம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாரீசில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா, உரிய அனுமதியின்றி தனது ஆண் நண்பரும் சக நீச்சல் வீரருமான கேப்ரியல் சாண்டோஸ் உடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரோலினாவை ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்குவதாகவும், உடனடியாக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், கரோலினாவுடன் அவுட்டிங் சென்ற சான்டோஸை இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.

இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா தோல்வி

மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார். ரவுண்ட் ஆஃப் 32இல் 9-11,12-10, 11-4, 11-5, 10-12, 12-10 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நள்ளிரவு நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் சன் யிங்ஷாவுடன் மோதினார். 26 வயதான இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா நம்.1 வீராங்கனயுடன் சிறப்பாகவே போட்டியிட்டார். இருப்பினும் 10-12, 10-12, 8-11, 3-11 என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலா தோல்வியுற்றார்.

நைஜீரிய தலைநகா் லாகோஸில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் (டபிள்யுடிடி) போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா இரட்டை தங்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டிலும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

சாத்விக்-சிராக் இணை தோல்வி

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான நேற்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் செட்டை இந்திய இணை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 2 செட்டுகளையும் மலேசியா இணை கைப்பற்றி வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலில் மலேசிய இணை 13-21, 21-14 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த அதிர்ச்சி தோல்வியின் மூலம் சாத்விக் - சிராக் இணையின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து