முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கூர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க தடை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் 30 - மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ குட்டிக்கார் தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் கம்பெனி முடிவு செய்து அதற்காக அப்போதைய இடதுசாரி அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய அரசு அனுமதியளித்தது.  அதன் அடிப்படையில் 997 ஏக்கர் நிலத்தை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. விவசாயிகளிடம் இருந்து இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. இதற்கு மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்திருந்தது. 

எதிர்ப்பு அதிகமானதை அடுத்து டாடா மோட்டார்ஸ் தனது குட்டி கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு மாற்றிக்கொண்டது. மேற்கு வங்கத்தில் தற்போது முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் என்று சட்டசபையில் மம்தா பேனர்ஜி அரசு தீர்மானம் நிறைவேற்றி சட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நிலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது. இதை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் டாடா மோட்டார்ஸ் கம்பெனி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசு எடுக்கும் நடவடிக்கையில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.  இருந்தாலும் இதுதொடர்பான தீர்ப்பு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.  ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டாடா மோட்டார்ஸ் மேல் முறையீடு செய்தது. தாங்கள் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கும் மேற்கு வங்க அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு விடுமுறைக்கால நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று விசாரணை நடத்தியது. டாடா மோட்டார்ஸ் வசம் உள்ள நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க மேற்கு வங்க அரசுக்கு இடைக்காலத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பு வரும்வரை நிலங்களை ஒப்படைக்கக் கூடாது என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறதே தவிர நிலங்களை சர்வே செய்யும் பணியையோ, விநியோகம் செய்யும் நடவடிக்கைகளையோ நிறுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவில்லை என்று மம்தா பேனர்ஜி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்