முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூறு யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் - மின்சார கட்டணம் சீரமைப்பு வாரியம் விளக்கம்

வியாழக்கிழமை, 26 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : நூறு யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தி்ன் அடிப்படையில் மின்கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். சொன்னதைச் செய்வோம் என முதலமைச்சர் வாக்குறுதி வழங்கியதற்கேற்ப, பதவியேற்றதும், தாம் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் ஒன்றாக மின்சாரக் கட்டணம் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான கட்டணச் சலுகை குறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.காசி விளக்கமளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: .

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.  அடுத்த 100 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா ஒரு ரூபாய் 50 காசுகள் வீதம் வசூலிக்கப்படும். நிலைக்கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும்.  200 முதல் 500 யூனிட் வரையிலான மின்சாரப் பிரிவில், முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும். அடுத்த 100 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா 2 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த 300 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா 3 ரூபாய் வசூலிக்கப்படும். நிலைக்கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படும்.

500 யூனிட்டுக்கும் மேற்பட்ட மின்சாரப் பிரிவில், முதல் 100 யூனிட் கட்டணமில்லாமல் வழங்கப்படும். அடுத்த 100 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா 3 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்படும். அடுத்த 300 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா 4 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்படும். அடுத்த 600 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு தலா 6 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்படும். நிலைக்கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்