முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலையான வருவாய் ஈட்டிக்கொடுக்கும் கறவை மாடு வளர்ப்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2016      வேளாண் பூமி
Image Unavailable

கால்நடை வளர்ப்பில் கறவை மாடு வளர்ப்பு என்பது சத்தான பால், வளமான எரு ஆகியவற்றை தருவதோடு ஆண்டு முழுவதும் சுயவேலைவாய்ப்பு அளித்து நிலையான வருவாய் ஈட்டிக்கொடுக்கிறது. இன்றைய கன்றே நாளைய பசு. ஆகவே கன்றுகளை நன்கு பராமரிப்பதன் மூலம் பசுக்களை நமது பண்ணையிலேயே உருவாக்கலாம். சந்தைகள், வீடுகள், தரகர்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் கறவை மாடுகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.  ஜெர்சி கலப்பின பசுக்கள், வடநாட்டைச் சேர்ந்த கறவை இனங்களான கிர், சாகிவால் தார்பார்கள் போன்ற இனங்களை வாங்கலாம். எந்த இனமாக இருந்தாலும் இளவயது மாடுகளை வாங்குவதே பண்ணைக்கு லாபகரமாக இருக்கும். முதல் அல்லது இரண்டாவது ஈற்று மாடுகளை வாங்குவது நன்று. மாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மாடுகளின் நாசிகளுக்கு நடுவே உள்ள கறுப்பு பகுதி ஈரமாக இருக்க வேண்டும். அசைபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். சாணம் பேதி, ரத்தம், சீதம் அல்லது துர்நாற்றத்துடன் இருந்தாலோ மாட்டின் சிறுநீர் வெளிமஞ்சள் நிறமற்று சிவப்பு நிறமாக இருந்தாலோ, மாட்டின் ரோமங்கள் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருந்தாலோ அது நோயின் அறிகுறியாகும்.

பால்மடி, உடலோடு ஒட்டி பெருத்து இருக்க வேண்டும். மடி மிருதுவாக இருக்க வேண்டும், காயங்கள், கொப்புளங்கள் இருக்கக்கூடாது.  நான்கு காம்புகளும் சீராக சதுர வடிவில் உள்ளது போல் இருக்க வேண்டும். மடிக்குச் செல்லும் இரத்த நாளம் நன்கு புடைத்துக் காணப்பட வேண்டும். பால்கறக்கும் போது காம்புகளில் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.  காம்புத் துவாரம் நன்றாக இருந்தால் பால் கறக்கும் போது சீராக வரும். மாடு வாங்கும் பொழுது கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

மாட்டுக்கொட்டகை அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் பனை, தென்னை ஓலை மூங்கில் கொண்டு அமைக்கலாம் அல்லது செங்கல், சிமிண்ட், ஆஸ்பெஸ்டாஸ் அலுமினியம் கூரையுடன் கூடிய கட்டிடமாகவும் அமைக்கலாம்.  கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைக்க வேண்டும்.  கொட்டகையைச் சுற்றி மாடுகள் காலாற உலாவர திறந்தவெளிபரப்பு இருத்தல் நன்று. கூரையின் உயரம் 220 செ.மீ. இருந்தால் போதுமானது ஆகும்.

சரிவிகித உணவும் நல்ல பராமரிப்பும் அளிக்கப்பட்ட கலப்பின கிடாரிக் கன்றுகள் 12 முதல் 18 மாத வயதில் சுமார் 200 கிலோ உடல் எடையை அடைந்து பருவ வயதை எட்டுகிறது.  இரண்டு வயதிற்குள் கன்றுகள் சுமார் 200 கிலோ உடல் எடையை எட்டி சரியான தருணத்தில் இனப்பெருக்கம் செய்தால் அது மூன்று வயதிற்குள் முதல் கன்றை ஈனும். இந்த கால இடைவெளி எவ்வளவு தள்ளிப்போகிறதோ அவ்வளவு நாட்கள் கன்று பிறப்பு தள்ளிப்போகும். அதனால் நாட்கள் தள்ளிப்போய் பண்ணையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். 

சினைப்பருவ காலங்களில் கிடேரி பசு அமைதியாக இருக்காது. அடிக்கடி அடிவயிற்றிலிருந்து கத்தும். அருகில் உள்ள மாடுகள் மீது தாவும். மேலும் பிற மாடுகள் தன்மீது தாவினால் அசையாது நின்று அனுமதிக்கும். பிறப்புறுப்பு சிவந்து தடித்திருக்கும். தீவனம் உண்ணும் அளவு குறையும். கண்ணாடி போன்ற நிறமற்ற சளி மாதிரியான திரவம் பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வடியும்.
காலை நேரத்தில் சினை அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும், மாலை அல்லது இரவு நேரத்தில் தென்பட்டால் அடுத்தநாள் காலையிலும் கருவூட்டல் செய்வது சிறந்தது. கருவூட்டல் செய்த மாடுகளை மூன்றாவது மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்து சினையை உறுதி செய்ய வேண்டும்.

கன்று பிறந்தவுடன் மூக்கு, வாயைச் சுற்றியுள்ள சளி போன்ற திரவத்தை காய்ந்த துணியால் நன்கு துடைக்கவும். கன்றின் பின்னங்காலை பிடித்து தூக்கி மூக்கில் உள்ள சளியை ஒழுகச் செய்து அப்புறப்படுத்த வேண்டும். மூச்சுவிட சிரமப்பட்டால் மார்பை அழுத்தியோ அல்லது வாயை திறந்து நாக்கை விரலால் தடவியோ மூச்சுவிடும் படி செய்யலாம். தொப்புள் கொடியை கன்றின் தொப்புளிலிருந்து 2 அங்குல தொலைவில் நூலினால் கட்டிவிட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி முனையில் டிங்ஞ்சர் அயோடின் திரவத்தை தடவவேண்டும். கன்று பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளாக சீம்பால் குடிக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். கன்று பிறந்த ஒரு வாரத்திற்குள் குடற்புழு நீக்க மருந்து கொடுத்து பிறகு 6 மாத வயது வரை மாதம் ஒரு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுகளை பேன் மற்றும் மாட்டு ஈ போன்ற புற ஒட்டுண்ணிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ), புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ), தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ), தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ), சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ).

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது.  பல்லாண்டு தீவனப்புல் வகை – கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல்.  தானியப்பயிர்கள் - தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள் - சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா.

தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க – கோமாரி நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 4 மாத வயதில் பின்பு 6 மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போடலாம். சப்பை நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். தொண்டை அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். அடைப்பான் நோயிலிருந்து பாதுகாக்க முதலில் 6 மாத வயதில் பின்பு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடலாம். ( நோயுள்ள பகுதிகளில் மட்டுமே இத்தடுப்பூசி போட வேண்டும் ). மேலும் விபரங்களுக்கு:-
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சேலம்.
தொலைபேசி 0427-2410408
தொகுப்பு:
முனைவர் து.ஜெயந்தி
முனைவர் ப.ரவி
மருத்துவர் என்.ஸ்ரீபாலாஜி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago