முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், குடிமராமத்துப் பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம், முத்துசமுத்திரம் பகிர்மானக்கால்வாயில் பொதுப்பணித்துறை மற்றும் நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி,   முன்னிலையில்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர்  அமைச்சர்  பேசியதாவது

மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டு தலின்படி, செயல்படும் தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால், இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர் ஆதார பணிகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தை கருத்தில் கொண்டு  ஒரு முக்கிய பணியாக மாநிலத்தில் உள்ள நீர்ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்து, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர் வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கும், மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பகுதியாக முதற்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைப்பதற்காக பண்டைய ‘குடிமராமத்து” திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாசன அமைப்பின் சில பகுதிகள் விவசாயிகளால், பராமரிக்கப்பட்டு ‘குடிமராமத்து “ என்ற பெயரில் புழக்கத்தில் உள்ளது. குடிமராமத்து என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் ஆகும்.

மேலும், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும், செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்த மதிப்பீட்டில் 10 சதவீதம் மதிப்பீட்டு தொகை பாசன சங்கங்களில் இருந்து உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ, அல்லது பண பங்களிப்பாகவோ பெறப்பட்டு  பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில்  30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூ.100கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

நமது மாவட்டத்தில் 157 பணிகள் ரூ.720.54 இலட்சங்கள்மதிப்பில் 4,15,775 ஏக்கர் பாசன பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட

உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள்பலப்படுத்தப்பட்டு சேதமடைந்த  மதகுகள் பழுதுபார்க்கபடும். தற்போது குடிமங்கலம் முத்து சமுத்திரம் பகிர்மான கால்வாய் பகுதிகளில் ரூ.7 இலட்சம் மதிப்பில் 1480 ஏக்கர் பாசன பகுதிகளில் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் கடைமடை வரை சேதாரம் இன்றி சமச்சீரான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும். வரும் 2017 ஏப்ரல், மே மாதத்தில் தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.300 கோடி செலவில் மாநிலம் முழுவதும் இது போன்ற குடிமராமத்து பணிகள் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் இவ்வாறு  விவசாயிகளின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருக்கும்  அம்மா அவர்களின் அரசிற்கு தாங்கள் என்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும்  என  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்

இந்நிகழ்வின் போது பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், கரைபுதூர் எ.நடராஜன்(பல்லடம்),உ.தனியரசு (காங்கயம்), எஸ்.காளிமுத்து, (தாராபுரம்), திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் கிருஷ்ணன், ஆழியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துச்சாமி, அமராவதி வடிநில கோட்ட செயற்பொறியாளர் குழந்தைசாமி, உடுமலைப்பேட்டை கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், அகமது உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் தயானந்தன், பி.ஏ.பி. சங்கத்தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்