முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்-22-க்கு பிறகு வெளிநபர்கள் வெளியேற அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.20 - தமிழகத் தில் தேர்தல் பிரசாரம் 22ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு தொகுதியை சாராத வெளிநபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்  தேர்தல் அலுவலர்களால் வெளியேற்றபடுவார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2014 மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் 24ம் தேதி காலை 7மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 22ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி. கீழ்கண்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது. 

 

தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள், தொலைக்காட்சி, திரையரங்கங்கள் மற்றும் இதுபோல் வேறு எந்த ஊடகத்திலும் பிரசாரம் வெளியிடக்கூடாது. நவீன எலக்ட்ரானிக் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்யக்கூடாது. எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்திகள் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. 

 

தேர்தல் தொடர்பாக இசை வெளியீடு, திரைப்பட பாடல்களுக்கு ஆடுவது,  நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை யார் நடத்தினாலும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதத்தொகை செலுத்தவேண்டி வரும்.  

அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதிக்கு சம்பந்தப்படாதவர்கள்,  22ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு அவரவர் சொந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதிக்கு சென்றுவிட வேண்டும். 

மாவட்டத்துக்கும், சொந்த தொகுதிக்கும் சம்பந்தப்படாத நபர்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூகக்கூடங்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கியிருக்கிறார்களா என சோதிக்கப்படுவார்கள். வெளிநபர்கள் தங்காமல் இருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்யவேண்டும். வெளிநபர்கள் தங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். 

ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட எல்லை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் மூலம், வேறு தொகுதி நபர்கள் வாகனங்களில், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

சம்பந்தப்பட்ட வேட்பாளர் அனுமதியுடன் தொகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 22ம் தேதி மாலை 6 மணிவரைதான் இருக்கவேண்டும். 

வாக்கு பதிவு நாள் அன்று வேட்பாளர் பயன்படுத்த ஒரு வாகனம், அவரது தேர்தல் முகவர்கள் பயன்படுத்த ஒரு வாகனம், கட்சி தொண்டர்கள் பயன்படுத்த ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும். 

ழூவேட்பாளர்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படும் வாகனம், தேர்தல் முகவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை அழைத்துவர பயன்படுத்த கூடாது.  தேர்தல் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வாக்கு மையங்களுக்கு வாக்காளர்களை அழைத்து வந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 133வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். 

வாக்குப்பதிவு நாள் அன்று பூத்சிலிப் கொடுப்பதற்காக வேட்பாளர் சார்பில் அமைக்கப்படும் தற்காலிக பூத் அலுவலகம், வாக்கு பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். அதில் 2 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 

பூத் அலுவலகங்களில் உணவுப் பொருட்கள் எதையும் விநியோகிக்கக் கூடாது. 

வேட்பாளர்களுக்கான பூத் அலுவலகத்தில் அனுமதிக்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு மையத்தில் வாக்காளர்களாக இருக்கவேண்டும். அவர்கள் கிரிமினல் பின்னணியை கொண்டவர்களாக இருக்க கூடாது. 

தேர்தல் பிரசாரம் முடிவடையும் 22ம் தேதி மாலை 6 மணியிலிருந்து 48 மணிநேரத்திக்கு முன் எந்த கருத்து கணிப்பையும் வெளியிடக்கூடாது.  வாக்கு பதிவு முடிந்த பிறகு வெளியிடும் கருத்து கணிப்புக்கு ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து மே 12ம் தேதிவரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்