முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது ஹைதராபாத்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, ஏப்.20 - ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிய 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றி இலக்கை ராஜஸ்தான் அடைந்தது. 

டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்ந்தெடுத்த ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் வீரர்களை முதல் ஓவரிலிருந்தே திக்குமுக்காட வைத்தது. சுதாரித்து ஆடிய தவான் மற்றும் வார்னர் இணையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரன் சேர்க்க போராடியது ஹைதராபாத். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷிகர் தவாண் 38 ரன்கள் எடுத்திருந்தார். 

எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும், ஹைதராபாதின் பந்துவீச்சை எதிர் கொள்வது சவாலாகவே இருந்தது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன், மூன்றாவது பந்திலேயே அபிஷேக் நாயரை வெளியேற்றினார். தொடர்ந்து வந்த சாம்சன் மற்றும் வாட்சன் இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ரஹானே மற்றும் பின்னி இணை, ராஜஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டது. ரன் சேர்ப்பு கடினமாக இருந்தாலும், கிடைத்த மோசமான பந்துகளைத் தவறவிடாது இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். 46 பந்துகளில் ரஹானே அரை சதத்தை அடைந்தார். 59 ரன்கள் எடுத்த நிலையில் மிஷ்ரா பந்தில் அவர் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் வெற்றிவாய்ப்பு சமநிலைக்கு வந்தது. 

பின்னர் களமிறங்கிய ஹாட்ஜும் 1 ரன்னிற்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்கிற நிலையில் பாடியா ஒரு பவுண்டரி தேடித் தந்து ஆட்டமிழக்க, அதே ஓவரில் பின்னி மற்றொரு பவுண்டரியை அடித்தார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட, களமிறங்கிய ஃபால்க்னர், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி, அணியை வெற்றி பெறச் செய்தார். அரை சதம் அடித்த ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்