முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை.ஆக.18 - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்யா, டெல்லி கணேஷ், நாசர், பொன்வண்ணன், வையாபுரி, சின்னிஜெயந்த், மனோபாலா, சார்லி, ரவிக்குமார், ஸ்ரீகாந்த், கராத்தே தியாகராஜன், நடிகைகள் சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுக்குழுவில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நடிகர்–நடிகைகள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சில நடிகைகள் உறுப்பினர் ஆகாமலேயே படங்களில் நடித்து வருகிறார்கள். இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்த வருடம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் வரவு–செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் சங்க பொதுக்குழுவையொட்டி காமராஜர் அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரங்கத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது.

அடையாள அட்டை காண்பித்து கையெழுத்து போட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நாடக நடிகர்களும் இதில் அடங்குவர். உறுப்பினர் அல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பொதுக்குழுவில் சரக்குமார் பேசும்போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 3 மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையில் நடிகர் சங்கம் ஈடுபடும்’’ என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததுதான் குறையாக இருக்கிறது. அடுத்த வருடம் சொந்த கட்டிடத்தில் பொதுக்குழுவை நடத்த வேண்டும். நடிகர் சங்க தலைமைக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப்போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை அல்ல.

கேரளாவில் நடிகர் சங்கத்துக்காக நடிகர்கள் இணைந்து படத்தில் நடித்தனர். அதுபோல் நமது நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட நானும், ஆர்யா, கார்த்தி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

நாடக மேடையில் இருந்து திரையுலகுக்கு வந்து சாதனைகள் படைத்த டி.எஸ்.பாலையாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடத்தப்படும். மூத்த கலைஞரும் லட்சிய நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நீண்டகால கலை சேவையை பாராட்டி பாராட்டு விழா நடத்தப்படும்.

ரூ.10 கோடி அளித்து சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் ரூ.15 கோடி செலவில் 2 குளிர்சாதன படப்பிடிப்பு தளம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்– அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறது. மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற கமலுக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக அதிருப்தியாளர்களான பூச்சி முருகன், காஜா மொய்தீன், சுந்தரம் ஆகியோர் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர்.

அவர்களை சிலர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டவிடாமல் தடுப்பது நியாயமா? என்று கண்டித்து கோஷமிட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு 3 பேரையும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை கண்டித்து கோஷம் போட்டனர்.

இதையடுத்து அவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் வெளியே வந்து விட்டனர். இதுகுறித்து பூச்சி முருகன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பிரச்சினையில் தவறுகள் நடந்துள்ளதால் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கினேன். என்னை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அதற்கும் கோர்ட்டில் தடை பெற்றுள்ளேன்.

இன்றைய பொதுக்குழுவில் பங்கேற்க எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் பாதுகாப்போடு பொதுக்குழுவுக்கு வந்தேன். வருகை பதிவேட்டில் கையெழுத்திட என்னை அனுமதிக்கவில்லை. என்னை தரக்குறைவான வார்த்தைகளால் சிலர் திட்டினார்கள். எனவே பொதுக்குழுவில் பங்கேற்க முடியாமல் வெளியே வந்து விட்டேன்’’ என்றார்.

3 பேரையும் எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுந்ததால் பொதுக்குழுவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்