முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக நிர்வாகிகள் இல்ல திருமணம்: முதல்வர் நடத்தி வைத்தார்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 – சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 9 பேர் இல்ல திருமணங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்தார்.

அமைச்சர் செந்தூர் பாண்டியன் மகன் அய்யப்ப ராஜ்–அருணாஸ்ரீ, திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முருகையா பாண்டியன் மகன் வெங்கட்ராமன்–சுபிதா, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு மகன் பாலாஜி–பிரியங்கா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் மகள் டாக்டர் காயத்ரி–டாக்டர் கிருஷ்ணபாரத் ஆகியோரின் திருமணத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று நடத்தி வைத்தார்.

திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன்– மோனிகா, சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் உமாதேவன் மகன் முத்துக்குமரன்– சேதுக்கரசி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வெங்கடேஷ்வரன்– சுவாதினி, விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சேகர் மகன் ஜெயப்பிரகாஷ்– ராஜேஸ்வரி. மதுராந்தகம், நகர்மன்ற 5வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் மகள் பகவதி– ராஜ்மோகன் ஆகியோரின் திருமணத்தையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த திருமணங்கள் நடந்தது.

இங்கு பிரமாண்ட மேடை, பந்தல் போடப்பட்டிருந்தது. ஒரே மேடையில் அண்ணா தி.மு.க. குடும்ப திருமணங்களை முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா 10–55 மணிக்கு மேடைக்கு வந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்களும், மண வீட்டாரும் ‘‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க’’ என்று வாழ்த்து கோஷங்களை உற்சாகத்துடன் எழுப்பினார்கள்.

மேடைக்கு வந்த முதலமைச்சர் அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து கை கூப்பி வணங்கியும், கை அசைத்தும் அவர்களது உற்சாக வரவேற்பை பெற்றுக் கொண்டார்.பின்னர் 9 ஜோடி திருமணங்களையும் முதலமைச்சர் நடத்தி வைத்தார்.

ஒவ்வொரு திருமணமாக ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

முதலில் மணமகன் கையில் மங்கநாணை எடுத்து கொடுத்து மணமகள் கழுத்தில் அணிவிக்க சொன்னார். பின்னர் மணமகன் கையில் மாலை எடுத்து கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார். பின்னர் மணமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அட்சதை தூவி மணமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்தினார். பின்னர் மணமக்களுக்கு பரிசு வழங்கினார்.

முதலமைச்சருடன் மணமக்களும், பெற்றோரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

9 ஜோடி திருமணங்களையும் நடத்திய பின்னர் 9 ஜோடிகளும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

மங்களகரமான இந்த நன்னாளில் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த, ஒன்பது ஜோடி மணமக்களுக்குத் திருமணம் நடத்தி வைத்ததிலும்; உங்களை எல்லாம் சந்தித்து உங்களிடையே உரையாடுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தீர்த்தங்கள் ஒன்பது! தானியங்கள் ஒன்பது! ரசங்கள் ஒன்பது! கிரகங்கள் ஒன்பது! ரத்தினங்கள் ஒன்பது! உலோகங்கள் ஒன்பது! வீரர்கள் ஒன்பது! அடியார்களின் பண்புகள் ஒன்பது! அபிஷேகங்கள் ஒன்பது! என்பது போல், இன்று நடத்தி வைக்கப்பட்டுள்ள திருமணங்களின் எண்ணிக்கையும் ஒன்பது !

இன்றைய தினம் முதலாவதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், அன்புச் சகோதரர் பி. செந்தூர் பாண்டியன்– – சண்முகதுரைச்சி தம்பதியினரின் மகன் சி. ஐயப்பராஜூக்கும்;

சுப்பையா –கனகா தம்பதியினரின் மகள், எஸ். அருணாஸ்ரீக்கும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

ஆரம்ப கால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் செந்தூர் பாண்டியன், தூய தொண்டர். கழகத்தில் சாதாரண உறுப்பினராக இருந்து படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். செங்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளராகவும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பல்வேறு அரசுப் பதவிகளையும் வகித்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

அடுத்ததாக, திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான, அன்புச் சகோதரர் ஆர். முருகையா பாண்டியன் – –லெட்சுமி தம்பதியினரின் மகனும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான, ஆர்.எம்.வெங்கட்ராமனுக்கும்; ராஜகோபால்–பார்வதி தம்பதியினரின் மகள் ஆர். சுபிதாவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

ஆரம்ப கால விசுவாசியும், தொடக்கம் முதல் ஒரே தலைமையின் கீழ் பணியாற்றி வருபவருமான, அன்புச் சகோதரர் முருகையா பாண்டியன், திருநெல்வேலி மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என படிப்படியாக உயர்ந்து தற்போது திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல், பல்வேறு அரசுப் பதவிகளை வகித்த அனுபவமும் இவருக்கு உண்டு. எனது நம்பிக்கைக்கு உரியவர்.

மூன்றாவதாக, ஆரம்ப கால விசுவாசியும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவரும், சென்னை மாநகராட்சி 98-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் தாடி ம. ராசு– காஞ்சனா தம்பதியினரின் மகன் எம்.ஆர். பாலாஜிக்கும்; அண்ணாதுரை– நாகம்மாள் தம்பதியினரின் மகள் ஏ.பிரியங்காவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

அன்புச் சகோதரர் தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தற்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக திறம்பட பணியாற்றி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரன் -– சந்திரா தம்பதியினரின் மகள் காயத்ரிக்கும்; சந்தணப் பாண்டியன் – காசி ராஜாத்தி தம்பதியினரின் மகன் எஸ். கிருஷ்ண பாரத்துக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.நயினார் நாகேந்திரன் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கிறார். தற்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார்.

தொடர்ச்சியாக, திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளரும், திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் கே. குப்பன் -– திலகவதி தம்பதியினரின் மகன், கே. மோகனுக்கும்; ராபர்ட்– பாத்திமா தம்பதியினரின் மகள் மோனிகாவுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த, குப்பன், தற்போது திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளராக இருந்து வருகிறார்.

ஆறாவதாக, சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர், கூட்டுறவு இணையத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் கே.கே.உமாதேவன் - முத்துலட்சுமி தம்பதியினரின் மகன் திருவளர்செல்வன் கே.கே.யு.முத்துக்குமரனுக்கும்; ரவி– சாந்தி தம்பதியினரின் மகள் சேதுக்கரசிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

உமாதேவன் ஆரம்ப கால கட்சிக்காரர். கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை, வகித்துள்ளதோடு, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஏழாவதாக, தெய்வத்திரு அழகர்சாமி நாயுடு– முத்துலட்சுமி தம்பதியினரின் மகனும், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளருமான அன்புச் சகோதரர்

ஏ.எல். வெங்கடேஷ்வரனுக்கும்; வி.பி. லெட்சுமணன்– வள்ளி தம்பதியினரின் மகள் எல்,சுவாதினிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

எட்டாவதாக, எனது பெயரில் செயல்பட்டு வரும் பேரவையின் விழுப்புரம் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர், அன்புச் சகோதரர் திண்டிவனம் கே. சேகர்– மல்லிகா தம்பதியினரின் மகனும் விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும்; துடிப்புமிக்க இளைஞருமான கே.எஸ். ஜெயபிரகாசுக்கும்; ரவி –பாக்கியலட்சுமி தம்பதியினரின் மகள், ராஜேஸ்வரிக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

நிறைவாக, ஆரம்ப கால விசுவாசியும், மதுராந்தகம் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதியும், நகர மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான, அன்புச் சகோதரர் ஈ. கிருஷ்ணன்– இந்திரா தம்பதியினரின் மகள் கே.பகவதிக்கும்; மனோகர் தெய்வத்திரு வள்ளி தம்பதியினரின் மகன் ராஜ்மோகனுக்கும் திருமணம் இனிதே நடந்தேறி உள்ளது.

இவர்களது திருமணங்களை நடத்தி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைத்துள்ள மணமக்கள், கரும்பைப் போல இனிப்பாய், காற்றைப் போல சுகமாய், இயற்கையைப் போல ரம்யமாய், ஊர் போற்றும் அளவுக்கு, வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவருமான முருகையா பாண்டியன் வரவேற்றார்.

அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, திருவொற்றியூர் நகர கழக செயலாளரும் திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.குப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார். மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் நூர்ஜகான் ரசாக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திருமண விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வீட்டிலிருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை வழிநெடுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஆங்காங்கே செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் ஏராளமான பஸ் தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்க கொடிகளுடன் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

நுழைவு வாயிலில் பெண்கள் சீருடையுடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார்கள்.சாலையில் இருபக்கமும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக கூடியிருந்து வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றார்கள்.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் இ.மதுசூதனன், ஈ.வி.கே.சுலோசனா சம்பத், பி.எச்.பாண்டியன், பொன்னையன், ஆதிராஜாராம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.செந்தமிழன், கே.பி.கந்தன், ராஜபாளையம் கோபால்சாமி, கடம்பூர் ராஜு, எம்.கே.அசோக், எம்.பி.க்கள் டாக்டர் வேணுகோபால், நவனீதகிருஷ்ணன், பி.குமார், டாக்டர் மைத்ரேயன், எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயவர்த்தன், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, சசிகலா புஷ்பா, மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., நா.பாலகங்கா, விருகை ரவி மற்றும் பரிமேலழகர், வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயில்கனி, தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் சரஸ்வதி ரங்கசாமி, வேளாங்கண்ணி, அஞ்சுலட்சுமி, திருச்சி மாவட்ட பேரவை செயலாளர் சீனிவாசன், நடிகர் ஜெயகோவிந்தன், மயிலை ராஜேஷ் கண்ணா, பகுதி செயலாளர்கள் நுங்கை மாறன், வி.கே.பாபு, கவுன்சிலர்கள் பி.சின்னையன், டி.சிவராஜ் உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்