முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மனுத்தாக்கல்: ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 - அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்துள்ளார்..

ஜெயலலிதா கையெழுத்திட்ட விண்ணப்ப மனுவை அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமைக் கழகத்தில் நேரில் தாக்கல் செய்தனர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அதிமுக அமைப்பு தேர்தல் பற்றிய முறையான அறிவிப்பு நேற்று அக்கட்சியின் தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

முதன் முதலாக அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 29-ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி இம்மாதம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தலைமைக்கழக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விண்ணப்ப மனுவை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்ப மனுவை கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் முறைப்படி தலைமைக்கழகத்தில் நேரில் வழங்கினர்.

இந்த விண்ணப்ப மனுவை அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து கையொப்பமிட்டிருந்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் , இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் வழிமொழிந்து கையொப்பமிட்டிருந்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் பொதுச்செயலாளராக போட்டியிட விண்ணப்பித்து தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் போட்டி போட்டுக்கொண்டு தலா ரூ.25 ஆயிரம் பணம் செலுத்தி மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

இம்மாதம் 24-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்